தூத்துக்குடி மாவட்டம், காமநாயக்கன்பட்டி தூய பரலோக மாதா பேராலயத்தின் புகழ்பெற்ற விண்ணேற்பு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
இவ்விழாவை முன்னிட்டு நேற்று இரவு 7.30 மணியளவில், குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் பேராலய வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் திருவிழாக் கொடியை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து இரவு 8 மணியளவில் ஆடம்பரக் கூட்டுத் திருப்பலி, மறையுரை சிந்தனை மற்றும் நற்கருணை ஆசீர்வாதம் ஆகியவை நடைபெற்றன.
முன்னதாகப் புனித மிக்கேல் அதிதூதரின் சப்பர பவனி சிறப்பாக நடைபெற்றது. இதில் காமநாயக்கன்பட்டி, எட்டுநாயக்கன்பட்டி, குருவிநத்தம், செவல்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவப் பெருமக்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர். விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்குத் திருப்பலியும் மறையுரையும் நடைபெறும்.
நாளை (சனிக்கிழமை): காலை 6 மணிக்குத் திருப்பலியும், காலை 8.30 மணியளவில் மரியன்னை மாநாடும் நடைபெறுகின்றன. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை): காலை 8 மணிக்குத் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் சிறப்புத் திருப்பலி, மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர்வாதம் நடைபெறும். ஆகஸ்ட் 14: காலை 6 மணிக்கு பங்குப் பேரவை உறுப்பினர்கள், வின்சென்ட் தே பவுல் சபை மற்றும் கிறிஸ்தவத் தொழிலாளர் இயக்கம் சார்பில் சிறப்புத் திருப்பலி நடத்தப்படுகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக ஆகஸ்ட் 15-ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணிபாப்புசாமி மற்றும் பாளையங்கோட்டை மறைமாவட்ட நிர்வாகி பேரருட் தந்தை மோட்சராஜன் ஆகியோர் தலைமையில் தேரடி ஆடம்பரக் கூட்டுத் திருப்பலியும், அதனைத் தொடர்ந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டப் பெரிய தேர் பவனியும் நடைபெறவுள்ளன.
வெளிமாநிலப் பக்தர்களின் வசதிக்காக ஆகஸ்ட் 15 மதியம் 12 மணிக்கு ஆங்கிலத்திலும், பிற்பகல் 2 மணிக்கு மலையாளத்திலும், மாலை 4 மணிக்கு ஹிந்தியிலும் சிறப்புத் திருப்பலிகள் நடைபெறுகின்றன.
இத்திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காகச் சென்னை, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்செந்தூர், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், கயத்தாறு மற்றும் கோவில்பட்டி ஆகிய ஊர்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் காமநாயக்கன்பட்டி வட்டார இறைமக்கள், பேராலயப் பங்குத்தந்தை மோயீசன் மற்றும் உதவிப் பங்குத்தந்தை மரியஜோமிக்ஸ் ஆகியோர் இணைந்து செய்து வருகின்றனர்.


