தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலப் பகுதிகளில் அனுமதியின்றி வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டதையடுத்து, அவற்றை வழங்கிய மாநகராட்சி ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா அண்மையில் மேற்கொண்ட கள ஆய்வின்போது, உரிய அனுமதி பெறாமல் பல வீடுகளில் குடிநீர் இணைப்புகள் அமைத்துப் பயன்படுத்தப்பட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அனுமதியின்றி குடிநீர் இணைப்புகளை வழங்கிய மாநகராட்சி ஊழியரை உடனடியாகப் பணியிடை நீக்கம் (Suspension) செய்து ஆணையர் உத்தரவிட்டார். மேலும், சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளர்கள் மாநகராட்சியில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்தி, அக்குடிநீர் இணைப்புகளை உடனடியாக முறைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
புதிய குடிநீர் இணைப்பு பெற விரும்புவோர் உரிய ஆவணங்களுடன் மாநகராட்சி அலுவலகத்தை அணுகி, வைப்புத் தொகை (Deposit), சாலை பராமரிப்புக் கட்டணம் மற்றும் மேற்பார்வைக் கட்டணம் ஆகியவற்றைச் செலுத்தி, அதிகாரப்பூர்வ வேலை உத்தரவு (Work Order) பெற்ற பிறகே குடிநீர் இணைப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் மாநகராட்சியின் உரிய அனுமதி இன்றி அமைக்கப்படும் குடிநீர் இணைப்புகள் உடனடியாகத் துண்டிக்கப்படும் என்றும், சட்டவிரோதமாக இணைப்புப் பெற்ற வீட்டு உரிமையாளர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.


