பொட்டலூரணி விலக்கில் இடிக்கப்பட்ட சோலார் விளக்குக் கம்பங்களை சீரமைத்து உடனடியாக உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி விலக்கு பகுதியில் நேற்று முன்தினம் (ஜூலை 22) நள்ளிரவில் இரு சோலார் விளக்குக் கம்பங்கள் திட்டமிட்டு இடித்துச் சாய்க்கப்பட்டுள்ளன. மேலும், அதில் ஒரு கம்பத்தில் இருந்த இரு விளக்குகளையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமும், பொதுமக்கள் மத்தியில பெரும் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது.
கழிவுமீன் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு எதிராக பொட்டலூரணி மக்களின் சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் 800-வது நாள் நிறைவு அரங்கு கூட்டம் 22-ஆம் தேதி இரவு நடைபெற்ற சூழலில், இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தற்செயலாக நடந்த விபத்து அல்ல; உள்நோக்கத்துடன் திட்டமிட்டு நடத்தப்பட்டச் சதியாகும். விபத்தாக இருந்தால் இடித்த வாகனம் அங்கேயே நின்றிருக்கும். பொதுமக்கள் போராட்டத்தைத் திசைதிருப்பவே இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 5 மாதங்களுக்கு முன்பும் இதே போன்று இரு சோலார் விளக்குகள் இடிக்கப்பட்டுப் போராட்டம் வெடித்தது குறிப்பிடத்தக்கது. இடிக்கப்பட்ட இரண்டு சோலார் மின்விளக்குகளையும் சீரமைத்து இன்று இரவுக்குள் மீண்டும் எரிய வைக்க வேண்டும். தூத்துக்குடி கோட்டாட்சியர் பொதுமக்களுக்கு அளித்த உறுதிமொழியின்படி, அவசரகால நிதியைப் பயன்படுத்தி பொட்டலூரணி விலக்கில் உடனடியாக உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட வேண்டும்.
விபத்துகளையும் அசம்பாவிதங்களையும் தடுக்கச் சாலையின் இருபுறமும் மூன்று தடுப்புகள் மற்றும் இரப்பர் வேகத்தடைகள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும். கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டம் தீவிரமடையும் எனப் பொட்டலூரணி பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.


