தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம், நாடார் பேரவை சார்பில் கல்விக்கண் திறந்த கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜரின் 124-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்குச் சமக தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமை வகித்தார். சமக மாநிலத் தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் காமராசு நாடார், மாநிலக் கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாடார் பேரவை தெற்கு மாவட்டத் தலைவர் அருண் சுரேஷ் குமார் வரவேற்புரை ஆற்றினார்.
விழாவில் சமத்துவ மக்கள் கழக நிறுவனர் தலைவரும், நாடார் பேரவை மாநிலத் தலைவருமான எர்ணாவூர் நாராயணன் கலந்துகொண்டு ஏழை எளிய மக்கள் 1,000 பேருக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, சமூகத்தின் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த சாதனையாளர்களுக்கு விருதுகளையும், முத்தையாபுரத்தில் புதிதாக அமையவிருக்கும் பெருந்தலைவர் காமராஜரின் முழு உருவச் சிலைக்கு ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையும் வழங்கிச் சிறப்புரையாற்றினார்.
மேலும், சமக மாநிலப் பொதுச் செயலாளர் சூலூர் சந்திரசேகர், மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் வக்கீல் விநாயகமூர்த்தி, தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட நாடார் பேரவை தலைவர் வேல்முருகன், ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன், திருவாரூர் மாவட்டச் செயலாளர் காளிமுத்து, தென்காசி மாவட்டச் செயலாளர் தளபதி ராஜா, நெல்லை மாவட்ட நாடார் பேரவை தலைவர் சார்லஸ், வடசென்னை ராயபுரம் பகுதி செயலாளர் ராஜேஷ், தூத்துக்குடி தெற்கு மாவட்ட நாடார் பேரவை செயலாளர் டேனியல் ராஜ், பொருளாளர் சுப்பையா உள்பட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவாக நாடார் பேரவை வடக்கு மாவட்டத் தலைவர் பரமசிவன் நன்றி கூறினார்.


