தூத்துக்குடியில் உலக மக்கள் தொகை தினம் 2026 விழிப்புணர்வு ரதம் மற்றும் பேரணியினை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் துவக்கி வைத்தார்.
உலக மக்கள் தொகை தினம் ஆண்டுதோறும் ஜூலை 11 அன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. குடும்பக் கட்டுப்பாடு, பாலின சமத்துவம், தாய்மார் சுகாதாரம், நிலையான வளர்ச்சி, குழந்தை திருமணம் தடுப்பு மற்றும் பெண் கல்வி குறித்துப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்பேரணி நடத்தப்பட்டது. தூய மரியன்னை கல்லூரி வளாகத்தில் துவங்கப்பட்ட இப்பேரணி இந்திரா காந்தி சிலை வரை சென்றடைந்தது. முன்னதாக, உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் வாசிக்க, அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
சமூகநலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் போன்ற துறைகள் மூலமாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், அவர்களுக்குத் தேவையான அரசு உதவித்தொகை கிடைப்பதற்கும் இத்துறைகள் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. எனவே, பொதுமக்கள் இந்த விழிப்புணர்வுக் கருத்துக்களைப் பின்பற்றி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிகழ்வில் இணை இயக்குநர் (நலப்பணிகள்) (பொறுப்பு) மற்றும் துணை இயக்குநர், மருத்துவம் ஊரகப்பணிகள் மற்றும் குடும்பநலம் பொன் ரவி, துணை இயக்குநர்கள் சுந்தரலிங்கம் (காசநோய்), யமுனா (தொழுநோய்), மருத்துவ கண்காணிப்பாளர் பத்மநாபன், ரோட்டரி சங்கத் தலைவர், உறுப்பினர்கள், மாவட்ட விரிவாக்க கல்வியாளர்கள், வட்டார சுகாதாரப் புள்ளியாளர்கள் மற்றும் குடும்பநலம் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


