வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாகப் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியிலிருந்து விலக்களிக்க வேண்டும் எனத் தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் கணேசன், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஜீவானந்தம் ஆகியோர் மாவட்ட ஆட்சியருக்குக் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
தூத்துக்குடி நகர்ப்புற வட்டாரக் கல்வி அலுவலரின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர்களில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாகத் (BLO) தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். மேலும், கடந்த ஆண்டு நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியில் (SRER) பல மாதங்கள் வீடு வீடாகச் சென்று களப்பணியாற்றியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போதும், வாக்காளர் தகவல் சீட்டுகளை வீடு வீடாகச் சென்று வழங்கும் பணி முதல் வாக்குச்சாவடி அமைப்பதற்குத் தேவையான அனைத்துப் பணிகளையும் வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளனர்.
பள்ளிகளில் தங்களின் முதன்மைப் பணியான கற்பித்தல் பணி பாதிக்காத வகையில், ஆசிரியர்கள் தொடர்ந்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாகப் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியிலிருந்து விலக்களிக்க வேண்டும். மேலும், உடல்நலம் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் 55 வயதைக் கடந்த ஆசிரியர்களுக்கும் இப்பணியிலிருந்து முழுமையாக விலக்களிக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது


