விளாத்திகுளம் வட்டம் ஆற்றங்கரை கிராமப் பாசனக் கண்மாய்களைத் தூர்வாரவும், விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கக் கோரியும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஆற்றங்கரை பாசன கண்மாய் விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் (ஆற்றங்கரை, குருவார்பட்டி, குமாரபுரம், கந்தசாமிபுரம், கருத்தையாபுரம் கிராமங்கள்) ஒருங்கிணைப்பாளர் க.முருகன்ராஜ் (தந்தை பெயர்: கருப்பசாமி) தலைமையில் இக் கோரிக்கை மனு சமர்ப்பிக்கப்பட்டது. அம் மனுவில், விளாத்திகுளம் வட்டம் ஆற்றங்கரை கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பாசனக் குளங்கள் பல ஆண்டுகளாகத் தூர்வாரப்படாமல் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் போதிய நீர் தேங்காமல், மறுகால் வழிந்தோடிப் பாசனத்திற்குப் பயன்படாமல் வீணாகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு இக் கண்மாய்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்ட போது, அனுமதி பெற்றவர்கள் விதிமுறைகளை மீறி மண் எடுத்ததால் இக் கண்மாய்கள் வண்டல் மண் எடுக்கத் தடை செய்யப்பட்ட கண்மாய்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இப் பாசனக் குளத்தின் நீர் பற்றாக்குறையால் சுமார் 600 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் முழுமையாக விவசாயம் செய்ய முடியாத நிலை நீடிக்கிறது. இக் கண்மாயில் படியும் சத்துள்ள வண்டல் மண் விவசாயிகளுக்குக் கிடைக்காமல் தடைபட்டுள்ளது.
இத்தடைகளை நீக்கி, விவசாயிகள் தங்களது நிலங்களுக்கு இலவசமாக வண்டல் மண் எடுக்கும் திட்டத்தின் கீழ், இப் பாசனக் குளத்தின் விபரங்களை இணைத்து மாவட்ட அரசிதழ் பதிவு வெளியீட்டில் உடனடியாக வெளியிட வேண்டும் என விவாசயிகள் கோரியுள்ளனர். இப் பாசக் கண்மாயை அரசின் நிதி உதவியுடன் முழுமையாகத் தூர்வாரும் பணியை மேற்கொள்ள உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜனுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


