எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மதுரை உயர் நீதிமன்றத்தில் கடந்த 12.10.2020 அன்று மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது:
“தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், ஆத்தூர் ஆற்றுப்படுகையில் உள்ள தொல்லியல் எச்சங்களைப் பார்வையிடவும், வறண்ட ஆற்றுப்படுகையில் காணப்படும் கல் கட்டமைப்புகளில் தொல்லியல் அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும் நிபுணத்துவம் வாய்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் அடங்கிய குழுவை நியமிக்க வேண்டும்.
மேலும், ஆத்தூர் ஆற்றுப்படுகையில் காணப்படும் கல் கட்டமைப்புகளில் நவீன அறிவியல் முறைகளைப் பயன்படுத்தித் தொல்லியல் அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்” எனத் தனது மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கை மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் டாக்டர் அழகுமணி தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது. விசாரணைக்குப் பின், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை முதன்மைச் செயலாளர், தொல்லியல் துறை ஆணையர், திருச்சி இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோர், அடுத்த விசாரணை தேதிக்குள் இந்த மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


