நெல்லை – தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் மீண்டும் பெரிய அளவில் ஓட்டை விழுந்துள்ளதால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்சியடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களை இணைக்கும் முக்கியப் போக்குவரத்துப் பாலமாக வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலம் விளங்கி வருகிறது. இந்த மேம்பாலத்தில் கடந்த காலங்களில் அடுத்தடுத்து பலமுறை பெரிய அளவிலான விரிசல்களும், ஓட்டைகளும் விழுந்து தற்காலிகப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், தற்போது பாலத்தின் ஒரு பகுதியில் மீண்டும் பெரிய அளவில் ஓட்டை விழுந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்குப் பலவீனமடைந்துள்ளது.
நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக மற்றும் இலகுரக வாகனங்கள், பேருந்துகள் கடந்து செல்லும் இந்த தேசிய நெடுஞ்சாலைப் பாலத்தில், அடுத்தடுத்து ஓட்டைகள் விழுவது வாகன ஓட்டிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்காலிகமாகச் சிமெண்ட் கலவைகளைப் பூசிச் சரிசெய்வதாலேயே இந்த உள்கட்டமைப்புப் பலவீனம் தொடர்கதையாக மாறி வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இப்பகுதியில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்னதாக, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, பாலத்தின் நிலைமையைத் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும் எனவும், தற்காலிகப் பூச்சுகளுக்குப் பதிலாகப் பாலத்தை முழுமையாகப் பலப்படுத்தும் நிரந்தரத் தீர்வை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்துள்ளது. தற்போதைய ஓட்டை காரணமாக அப்பகுதியில் விபத்துகளைத் தடுக்கத் தற்காலிகப் பாதுகாப்பு எச்சரிக்கைகள் வைக்கப்பட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.


