தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி வளர்ச்சிப் பணிகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான மறு ஆய்வுக் கூட்டம் இன்று (25.06.2026) நடைபெற்றது.
இக்கூட்டத்தை நடத்தி முடித்த பின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் புதிய பேருந்து நிறுத்தம் மற்றும் 2 இடங்களில் நியாய விலைக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த கூட்டத்தின் தொடர்ச்சியாக, அடுத்தகட்ட அடிப்படைத் தேவைகள் குறித்து இந்த மறுஆய்வு நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாத காலமாகத் தொகுதி வளர்ச்சிப் பணிகளுக்காக 10 முக்கியத் துறை அதிகாரிகளுடன் தொடர் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மழைக்காலம் தொடங்கவுள்ளதால் குளங்களைத் தூர்வாருதல் மற்றும் பராமரிப்புப் பணிகளை விரைவுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருந்த மின்சாரப் பற்றாக்குறை மற்றும் மின் விநியோகப் பிரச்சினைகள் படிப்படியாகச் சரிசெய்யப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்குத் தேவையான இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் மற்றும் வருவாய்த்துறை சான்றிதழ்களை எவ்விதத் தாமதமும் இன்றி விரைவாக வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத இடங்களில் புதிய கட்டிடங்கள் அமைக்கவும், விவசாயிகளுக்குத் தேவையான தரமான விதைகள் தடையின்றி அருகில் கிடைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
குடிநீர் பற்றாக்குறையைப் படிப்படியாகத் தீர்க்கத் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும், பிராந்தியத் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த ஜவுளி பூங்கா அமைப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி வாகைக்குளம் பகுதியில் ஏற்பட்ட புயல் போன்ற பலத்த காற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு, தங்குமிடம் மற்றும் மின்சார வசதிகள் உடனடியாகச் செய்து தரப்பட்டுள்ளன. அங்குச் சேதமடைந்த ஓட்டு வீடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த்துறை மூலமாகக் கணக்கெடுக்கப்பட்டு விபரங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன, அவர்களுக்குத் தேவையான உதவிகள் விரைவில் வழங்கப்படும்.
மேலும், வரும் மழைக்காலங்களில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகள் முன்கூட்டியே கண்டறியப்பட்டுள்ளன. தண்ணீர் தேங்கும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றத் தேவையான அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மதன் ராஜா தெரிவித்தார்.


