தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.56,900 பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், வட்டார போக்குவரத்து அதிகாரி உட்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்!
தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகனப் பதிவு, வாகனப் பதிவு புதுப்பித்தல், தகுதிச்சான்று வழங்குதல், வாகன ஓட்டுநர் உரிமம் வழங்குதல் மற்றும் வாகன உரிமம் புதுப்பித்தல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்கு இடைத்தரகர்கள் மூலமாகவும், நேரடியாகவும் பொதுமக்களிடமிருந்து பணம் வசூலிக்கப்படுவதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இத்தகவலைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 18 அன்று ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு டிஎஸ்பி பீட்டர் பால்துரை தலைமையிலான போலீசார் தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். இச்சோதனையின் போது அலுவலகத்தில் கணக்கில் வராமல் வைக்கப்பட்டிருந்த ரூ.56 ஆயிரத்து 900 ரொக்கப் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார், தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அதிகாரி ராஜேந்திரகுமார் உட்பட 7 பேர் மீது முறைப்படி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


