தூத்துக்குடி சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் 6 புதிய திட்டங்களை மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் தொடங்கி வைத்தார்.
இந்தியாவின் முன்னணிப் பெருந்துறைமுகங்களில் ஒன்றான தூத்துக்குடி சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் கல்வி, நிலைத்தன்மை மற்றும் மின்னணு மாற்றம் தொடர்பான பல்வேறு முக்கிய முயற்சிகளின் அர்ப்பணிப்பு விழா புதுடெல்லியில் உள்ள போக்குவரத்து பவனில் நடைபெற்றது. இதில் மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் இத்திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
சரக்குக் கையாளுதலைத் தாண்டி, துறைமுகத்தின் நீண்டகால வளர்ச்சி மற்றும் சமூக மேம்பாட்டை இலக்காகக் கொண்டு அர்ப்பணிக்கப்பட்ட 6 திட்டங்களின் விபரங்கள் வருமாறு:
கேந்திரிய வித்யாலயா பள்ளி (வித்யா பிரவேஷ்): துறைமுக ஊழியர்கள், மத்திய அரசுப் பணியாளர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் குழந்தைகளுக்கு சிபிஎஸ்இ (CBSE) பாடத்திட்டத்தின் கீழ் தரமான கல்வி வழங்கும் பொருட்டு, துறைமுக வளாகத்தில் புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்கப்பட்டு, 2026-27 கல்வி ஆண்டிற்கான ‘வித்யா பிரவேஷ்’ நிகழ்வு காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கப்பட்டது.
நிலைத்தன்மை அறிக்கை 2026 மற்றும் சான்றிதழ்: “பசுமை கடல்சார் எதிர்காலத்தை நோக்கி” என்ற தலைப்பில் துறைமுகத்தின் முதல் விரிவான நிலைத்தன்மை அறிக்கை வெளியிடப்பட்டது. புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் பயன்பாடு மற்றும் கார்பன் உமிழ்வைக் குறைத்தமைக்காகத் துறைமுகத்திற்குப் புகழ்பெற்ற ‘Scope-2 கார்பன் வெளியீடு இல்லாத துறைமுகம்’ சான்றிதழ் வழங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
PortGPT மொபைல் செயலி அறிமுகம்: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் (Generative AI) மூலம் இயங்கும் ‘PortGPT’ மொபைல் செயலியை அமைச்சர் அறிமுகப்படுத்தினார். இந்த வசதியைப் பெறும் இந்தியாவின் முதல் பெருந்துறைமுகம் தூத்துக்குடி என்பது குறிப்பிடத்தக்கது. இது துறைமுகத் தகவல்களை எளிதாக அணுகவும், செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும் உதவும்.
ஐஐஎம் கொல்கத்தா ஆய்வு மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம்: ஐஐஎம் கொல்கத்தா நிறுவனம் தயாரித்த, துறைமுகத்தின் பசுமை ஹைட்ரஜன் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் குறித்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. மேலும், ஊழியர்களின் திறன் மேம்பாடு மற்றும் கடல்சார் தளவாட ஆராய்ச்சிக்காக வதோதராவில் உள்ள கதி சக்தி விஸ்வவித்யாலயா பல்கலைக்கழகத்துடன் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் பேசுகையில், மத்திய அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுத்தப்படும் இத்திட்டங்கள் வர்த்தகம், தொழில்துறை மற்றும் உள்ளூர் மக்களுக்குப் பெரும் பயனளிப்பதோடு, ‘விக்ஸித் பாரத் 2047’ தேசிய இலக்கை அடையப் பெரிதும் பங்களிக்கும் என்று தெரிவித்தார்.


