எட்டயபுரத்தில் உள்ள சாலையோரக் கடைகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில், இரண்டு கடைகளில் இருந்து அதிக வண்ணம் கலந்த, கெட்டுப்போன 10 கிலோ கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது!
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் உள்ள சாலையோரக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் உணவுப் பாதுகாப்பு அதிகாரி செல்லப்பாண்டி தலைமையில் அதிகாரிகள் நேற்று காலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மேலவாசல் பகுதியில் உள்ள 2 சாலையோரக் கடைகளில் அதிக வண்ணம் கலந்த, கெட்டுப்போன 10 கிலோ சிக்கனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி உடனடியாக அதே பகுதியில் பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. விதிகள மீறிய அந்த 2 கடை உரிமையாளர்களுக்கும் தலா 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
உணவுப் பாதுகாப்புத் துறையின் முறையான உரிமம் இல்லாமல் செயல்பட்ட 7 கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர். மேலும், சாலையோரக் கடைகளில் வடை, பஜ்ஜி உள்ளிட்ட உணவுப் பொருட்களைத் தூசி படராத வண்ணம் கண்ணாடிப் பெட்டிகளில் வைத்துச் சுகாதாரமாக விற்பனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
மளிகைக் கடைகளில் ஆய்வு:
தொடர்ந்து பஜார் பகுதியில் உள்ள கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அங்குள்ள மளிகைக் கடைகளில் மசாலா பொருட்கள் மற்றும் சமையல் எண்ணெயின் இருப்பு தரம், லேபிள் விபரங்கள் மற்றும் காலாவதியாகும் தேதி ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன.
காலாவதியான பொருட்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த அதிகாரிகள், அனைத்துக் கடை உரிமையாளர்களும் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி முறையாக உரிமம் பெற வேண்டும் என்றும், ஏற்கனவே உரிமம் பெற்றவர்கள் உரிய காலத்தில் அதனைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.


