திருச்செந்தூர் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.4.84 கோடி வருமானம் கிடைத்தது. மேலும் 1 கிலோ தங்கமும், 26 கிலோ வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். திருவிழா மற்றும் சில முக்கிய தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் பணமாகவோ, நகைகளாகவோ தங்களது காணிக்கைகளை கோவிலுக்கு செலுத்துகின்றனர்.
இதற்காக கோவிலில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருமானம் மாதந்தோறும் எண்ணப்படுகின்றன. கோவில் வளாகத்தில் நேற்று முன்தினம் கோவில் தக்கார் அருள்முருகன் தலைமையில், இணை ஆணையர் ராமு முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன.
இதில், உதவி ஆணையர் மெய்வேல், தூத்துக்குடி உதவி ஆணையர் ராமசுப்பிரமணியன், கண்காணிப்பாளர் ரோகிணி, ஆய்வர் செந்தில்நாயகி, பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், அயற்பணி மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
உண்டியல் வருமானமாக பக்தர்கள் செலுத்தியிருந்த ரூ.4 கோடியே 84 லட்சத்து 34 ஆயிரத்து 795 ரொக்கப்பணம் கிடைத்தது. அதேபோல் 1 கிலோ 62 கிராம் தங்கமும், 26 கிலோ 267 கிராம் வெள்ளியும், 963 வெளிநாட்டு கரன்சிகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.


