வி.எம். சத்திரம் டெவலப்மெண்ட் டிரஸ்ட் சார்பாக நடைபெற்று வரும் சிறுவர்களுக்கான கோடைகால சூழலியல் சிறப்பு முகாமின் 5-ஆம் நாள் நிகழ்வில், நெல்லையின் ஜீவநதியான தாமிரபரணி ஆற்றின் சிறப்பம்சங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கடந்த மே 16-ஆம் தேதி தொடங்கிய இந்த கோடைகால சூழலியல் முகாம், வரும் மே 23-ஆம் தேதி வரை தொடர்ந்து வேல்ஸ் ஹிந்தி டியூஷனில் நடைபெறுகிறது. இன்று நடைபெற்ற 5-ஆம் நாள் நிகழ்வில் சிறுவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பிரபல எழுத்தாளரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான முத்தாலங்குறிச்சி காமராசு, தாமிரபரணி ஆற்றின் பழைமை, அதன் சிறப்பம்சங்கள் மற்றும் நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து சிறுவர்களிடையே விரிவாகக் கலந்துரையாடினார்.
சிறப்புரைக்கு முன்னதாக, இயற்கையின் சமநிலையைப் பேணும் பல்லுயிர் சூழல் (Biodiversity) மற்றும் அதனைச் சார்ந்த உயிரினங்கள் குறித்து மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் சுவாரஸ்யமான கதையாடல் நிகழ்த்தப்பட்டது.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியாக, வீடுகளில் அன்றாடம் சேரும் மக்கும் குப்பைகளைத் தரமான இயற்கை உரமாக்கும் *’பைப் கம்போஸ்டிங்’ (Pipe Composting)* திட்டம் குறித்து மாணவர்களுக்கு நேரடி செயல்முறைப் பயிற்சி அளிக்கப்பட்டது. இயற்கையோடு இயைந்த வாழ்வியலை இளம் தலைமுறையினருக்குக் கற்றுக்கொடுக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த சூழலியல் முகாம், சிறுவர்கள் மத்தியில் இயற்கை குறித்த பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.


