தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கான குப்பை கிடங்கிற்குப் பதிலாக, குடியிருப்புப் பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளைக் குவித்து வருவதால் அப்பகுதியில் கடும் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி அருகே மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் தினசரி வீட்டுக் குப்பைகள் மற்றும் இதர கழிவுகளைத் தூய்மைப் பணியாளர்கள் வாகனங்கள் மூலம் முறையாகச் சேகரித்து, அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள பிரதான குப்பை கிடங்கிற்கு கொண்டு போய் கொட்டுவதே வழக்கமான நடைமுறையாக இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட சமீர் ரிஷி வியாஸ் நகர் கிழக்குப் பகுதியில் உள்ள கலைஞர் நகர் மற்றும் கிழக்கு காமராஜர் நகர் அருகே, சாலை ஓரங்களிலும் குடியிருப்புப் பகுதிகளுக்கு மிக அருகிலும் தூய்மைப் பணியாளர்கள் லாரிகள் மற்றும் வாகனங்கள் மூலம் கொண்டு வரும் குப்பைகளை மொத்தமாகக் கூட்டி வைத்துப் பெரிய அளவில் குவித்து வருகின்றனர்.
வெப்பம் அதிகரித்து வரும் இந்தச் சூழலில், மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு மிக அருகில் டன் கணக்கில் குப்பைகள் தேங்கி அழுகுவதால், அந்தப் பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், இதனால் கொசுக்கள் மற்றும் ஈக்கள் உற்பத்தி அதிகரித்து, அப்பகுதியில் வசிக்கும் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவும் தீவிர அபாயம் ஏற்பட்டுள்ளது.
“குடியிருப்புப் பகுதிகளைக் குப்பை கிடங்காக மாற்றி வரும் ஊராட்சி நிர்வாகத்தின் இந்த அஜாக்கிரதைச் செயல் கண்டிக்கத்தக்கது” என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு, குடியிருப்பு மற்றும் சாலை ஓரங்களில் குப்பைகளைக் கொட்டக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, தேங்கியுள்ள குப்பைகளை அப்புறப்படுத்த அவசர உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


