தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் மற்றும் கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு துறைச் சார்ந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்படி, இன்றையதினம் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன்பிடி துறைமுகத்தின் ஏலக்கூடத்தினை பார்வையிட்டு, விசைப்படகுகளின் தொழிற்முறையினை கேட்டறிந்து, மீன்பிடி துறைமுகத்தில் நடைபெறும் உட்கட்டமைப்பு பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் மீன்பிடி துறைமுகத்தில் வருகைபுரிந்த மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 363 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் ஜல்ஜீவன் மிஷன் நிதியுதவியுடன் ரூ.515.72 கோடி திட்டமதிப்பீட்டில் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம், சேதுராமலிங்கபுரத்தில் செயல்பட்டு வரும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை (16.57 MLD) பார்வையிட்டார்.
மேலும், தாமிரபரணி ஆற்றின் 7வது அணைக்கட்டான மருதூர் அணைக்கட்டினை பார்வையிட்டு, அணையின் நீரியல் விபரம், நீர் வரத்து, நீர் வெளியேற்றம் மற்றும் கடந்த 2023-ம் ஆண்டு பெருவெள்ளத்தின்போது ஏற்பட்ட பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து, கருங்குளம் ஊராட்சி ஒன்றியம், வசவப்பபுரம் பகுதியில் ஆதரவற்ற, கைவிடப்பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கப்படும் முதியோர் கருணை இல்லத்தினை பார்வையிட்டு, அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக செயல்பட்டு வரும் விழுதுகள் – வட்டார அளவிலான ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையத்தினை பார்வையிட்டார்.
வேளாண்மை – உழவர் நலத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு தரமான சான்று பெற்ற விதைகள் கிடைக்கும் பொருட்டு கருங்குளம் வட்டாரம், கிள்ளிகுளத்தில் அமைந்துள்ள விதை சுத்திகரிப்பு நிலையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களில் இருந்தும் நெல் விதைகள், உளுந்து விதைகள் போன்ற விதைப் பண்ணைகள் அமைத்த விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டு, சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்று வரும் விபரங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, இருப்பு வைக்கப்பட்டிருந்த நெல், உளுந்து விதை சுத்திகரிப்பு பணிகள் மற்றும் சான்று அட்டை பொருத்தப்பட்ட விபரங்களை நேரில் ஆய்வு செய்தார். விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் தரமான சான்று பெற்ற விதைகள் கிடைக்க ஏதுவாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டது.
மேலும் கருங்குளம் வட்டாரத்தில் அமைந்துள்ள வல்லநாடு துணை வேளாண்மை விரிவாக்க மையத்தை ஆய்வு செய்து, அதில் விவசாயிகளுக்கு விற்பனை செய்வதற்காக இருப்பு வைக்கப்பட்ட சான்று பெற்ற உளுந்து விதைகள் மற்றும் நுண்ணூட்ட உரங்கள், உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் இருப்பு போன்றவற்றை ஆய்வு செய்து, அறிவுரைகளை வழங்கினார். தொடர்ந்து, தோட்டக்கலைத்துறையின் சார்பாக கருங்குளம் வட்டாரம், கீழவல்லநாட்டில் அமைந்துள்ள அரசு தோட்டக்கலை பண்ணையினை நேரில் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை மூலம் தரமான பழ மரக்கன்றுகள் மற்றும் நாற்றுகள் கிடைக்க தோட்டக்கலைத்துறை மூலம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அவர்களால் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
பின்னர், வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் அடிப்படை வசதிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்து, மருந்துகளின் இருப்பு, மருத்துவபயனாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், கேட்டறிந்தார்.
ஆய்வின் போது, தூத்துக்குடி மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் இளம்வழுதி, வேளாண்மை இணை இயக்குனர் கிருஷ்ணகுமார், செயற்பொறியாளர், நீர்வளத்துறை, கீழ்தாமிரபரணி மற்றும் கோரம்பள்ளம் ஆறு வடிநிலக் கோட்டம் தங்கராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மனோரஞ்சிதம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், உதவி நிர்வாக பொறியாளர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மகேஷ் குமார், தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் கு.அ.புஷ்ரா ஷப்னம், தோட்டக்கலை உதவி இயக்குநர் ஜெயந்தன், திருவைகுண்டம் வட்டாட்சியர் தாஹிர் அஹமது மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


