தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் சார்பில் “துறைமுக செயல்பாடுகளில் பாதுகாப்பை வலுப்படுத்துதல்” என்ற கருப்பொருளில் ‘துறைமுகப் பாதுகாப்புப் பயிலரங்கம் 2026’ நடைபெற்றது.
துறைமுக செயல்பாடுகளில் தடையற்ற பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் நடைபெற்ற இப்பயிலரங்கில், புதிய பாதுகாப்பு கையேடுகள் முறைப்படி வெளியிடப்பட்டன. தொடர்ந்து, கப்பல் தள பாதுகாப்பு, விபத்து தடுப்பு, மகளிர் பாதுகாப்பு, மின்சார பாதுகாப்பு மற்றும் தீ தடுப்பு அவசரகால நடவடிக்கைகள் குறித்துத் தொழில்துறை நிபுணர்களின் நேரடிச் செயல்முறை விளக்கங்களும், தொழில்நுட்ப அமர்வுகளும் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில் துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித், துணைத்தலைவர் ராஜேஷ் சௌந்தரராஜன், அதானி குழும மேலாண்மை திட்ட ஆலோசகர் சுப்ரத் திரிபாதி, முதன்மை ஆலோசகர்கள் பி. ரவீந்திரன், தெபி பிரசாத் தாஷ் ஆகியோர் கலந்துகொண்டு, விபத்தற்ற பணிச்சூழலை உருவாக்குவது குறித்தும், கூட்டுப் பொறுப்புடன் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் அவசியம் குறித்தும் உரையாற்றினர்.
விழிப்புணர்வு மௌன நாடகம், பட்டிமன்றம் மற்றும் வினாடி வினா போட்டிகளுடன் நடைபெற்ற இப்பயிலரங்கம், மூத்த துணை போக்குவரத்து மேலாளர் டி. ரமேஷ் நன்றியுரையுடன் நிறைவடைந்தது.


