தூத்துக்குடி மாநகராட்சி 1-வது வார்டு எல்லைக்குட்பட்ட சில்வர்புரம் சி.வ. குளத்தைச் சுற்றி அடர்ந்து வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து தூத்துக்குடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ‘பசுமை’ பாலகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாநகராட்சி 1-வது வார்டுக்குட்பட்ட சில்வர்புரம் சி.வ. குளத்தினைச் சீரமைக்கும் பணியினை நிறைவேற்ற கடந்த 20.02.2019 அன்று ரூ.11.50 கோடி மதிப்பில் தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் ஒப்படைக்கப்பட்டு வேலைகள் தொடங்கப்பட்டன.
ஆனால், இத்திட்டம் இன்றுவரை முழுமையாக நிறைவேற்றப்படாமல் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுவிட்டன. கடந்த எட்டு ஆண்டுகளாக எவ்விதப் பராமரிப்பும் இன்றி முடங்கிக்கிடக்கும் இக்குளத்தினைச் சுற்றியுள்ள நடைபயிற்சி மேடை மற்றும் அதன் கரைகளில் சுமார் 2 கிலோ மீட்டர் சுற்றளவிற்குச் சீமைக் கருவேல மரங்கள் காடு போல் அடர்ந்து வளர்ந்து காட்சியளிக்கின்றன.
பராமரிப்பற்ற இந்த ஆக்கிரமிப்புகள் காரணமாக, இப்பகுதியில் சமூக விரோதச் செயல்கள் அதிகரித்து வருவதோடு, விஷ ஜந்துக்களின் நடமாட்டமும் அதிகமாகியுள்ளது. இதனால் அருகிலுள்ள குடியிருப்புவாசிகள் அச்சத்தில் வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், அடுத்தடுத்து வரவிருக்கும் மழைக்காலங்களில் பெருமழை பெய்தால், இந்த ஆக்கிரமிப்புகள் காரணமாக மழைநீரைச் சி.வ. குளத்தில் முழுமையாகச் சேமிக்க இயலாத நிலை ஏற்படும்.
இதனால் சில்வர்புரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீண்டும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படும் ஆபத்தான சூழ்நிலையும் உருவாகியுள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சி.வ. குளத்தைச் சுற்றி வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
அத்துடன், தூத்துக்குடி முத்துநகருக்குப் பெருமை சேர்க்கும் வகையில், தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைந்து தனது சொந்தச் செலவிலேயே அரச மரம், ஆல மரம், வேம்பு, மா, புளி, நாவல், அத்தி, புங்கம், கொடுக்காப்புளி உள்ளிட்ட பல்வேறு பலன்தரும் மரங்களை நட்டுப் பராமரிக்கத் தனக்கு உரிய அனுமதி வழங்கி ஆவன செய்ய வேண்டும் என்று அவர் அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.


