சாத்தான்குளம் அருகே உள்ள சிதம்பராபுரம் ‘படை மிரட்டி’ புனித சந்தியாகப்பர் ஆலயத்தின் ஆண்டுத் திருவிழா, தேர்பவனி மற்றும் அசன விருந்துடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இவ்வாண்டுத் திருவிழா கடந்த மே 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் ஜெபமாலை, நவநாள் திருப்பலிகள் மற்றும் பல்வேறு அருட்தந்தையர்களின் தலைமையில் விசேஷப் பிரார்த்தனைகள் நடைபெற்றன.
விழாவின் ஒன்பதாம் நாளான சனிக்கிழமை (மே 9) இரவு 10 மணியளவில் புனித சந்தியாகப்பரின் அலங்காரத் தேர்பவனி நடைபெற்றது. முன்னதாக மாலையில் தூத்துக்குடி புனித அந்தோனியார் திருத்தல அதிபர் பபிஸ்டன் தலைமையில் ஆடம்பர மாலை ஆராதனை நடைபெற்றது. தேர்பவனியின் போது திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, புனிதருக்கு உப்பு மற்றும் மிளகு காணிக்கையாகச் செலுத்தித் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
பத்தாம் நாளான ஞாயிற்றுக்கிழமை (மே 10) காலை தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு ரவி பாலன் தலைமையில் திருவிழா கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. இதில் சிறுவர்களுக்குப் புது நன்மை மற்றும் திருமுழுக்கு வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மதியம் 2 மணிக்கு புனிதரின் சிறப்புத் தேர்பவனியும், மாலை 6:30 மணிக்குக் கொடியிறக்கமும் நடைபெற்றது.
இன்றைய நிகழ்ச்சிகள் (மே 11): திருவிழாவின் 11-ஆம் நாளான இன்று திங்கள்கிழமை காலை 6 மணிக்கு நன்றித் திருப்பலி நடைபெற்றது. மாலை 5:30 மணிக்கு ஜெபமாலை மற்றும் நற்கருணை ஆசீர்வாதம் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, திருவிழாவின் நிறைவாகப் பொதுமக்களுக்கு ‘ஊர் அசனம்’ (அன்னதானம்) வழங்கப்பட உள்ளது.
இந்தத் திருவிழா ஏற்பாடுகளைப் பங்குத்தந்தை ஜோசப் கலைச்செல்வன் தலைமையில், திருஇருதய அருள் சகோதரிகள், திருவிழா நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.


