பிரபல திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ், தனது சொந்த ஊரான புளியங்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் நீண்ட வரிசையில் நின்று தனது வாக்கைச் செலுத்தினார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புளியங்குளம் கிராமம் இயக்குநர் மாரி செல்வராஜின் சொந்த ஊராகும். அங்குள்ள அரசுத் தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு நேற்று (வியாழக்கிழமை) காலை நேரில் வந்த அவர், பொதுமக்களோடு ஒருவராக வரிசையில் நின்று தனது வாக்கை முறையாகப் பதிவு செய்தார்.
வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியதாவது: “எனது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக எனது சொந்த ஊருக்கு வந்துள்ளேன். ஒரு ஆட்சிக்கு யார் வரவேண்டும், யார் வரக்கூடாது என்பதைத் தீர்மானிக்கும் முழு அதிகாரம் மக்களிடமே உள்ளது. மக்கள் அனைவரும் சிந்தித்துச் செயல்பட வேண்டிய முக்கியமான நேரம் இது. குறிப்பாக, தங்களது சித்தாந்தத்தை மனதில் வைத்துச் செயல்பட வேண்டிய தருணம் இது” என்றார்.
சமூகப் பொறுப்புணர்வுடன் அவர் தெரிவித்த இந்தக் கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. முன்னதாக, தனது ஊர் மக்களுடன் இயக்குநர் மாரி செல்வராஜ் கலந்துரையாடியதுடன், அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.


