நூல்: குளிர் உதடுகள் (சிறுகதை தொகுப்பு)
ஆசிரியர்: குமிழ்முனை சைமன்
பதிப்பகம்: குமிழ்முனை பதிப்பகம்
நூல் கிடைக்குமிடம்: 9363090284
விமர்சனம்: முத்தாலங்குறிச்சி காமராசு
தூத்துக்குடியில் குமிழ்முனை பதிப்பகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. அதைப்பற்றி நான் பேசிக்கொண்டே இருக்கிறேன். அந்த விழா

வில் வெளியிடப்பட்ட நூல்களைப் பற்றி விமர்சனம் எழுத வேண்டும் என அன்றே முடிவு செய்துவிட்டேன். காரணம், என்னுடைய முதல் நூலுக்கு யாராவது விமர்சனம் எழுத மாட்டார்களா என ஏங்கிய அந்த காலம் என் நினைவுக்கு வந்தது. எனவே, எப்படியாவது எழுதிவிட வேண்டும் என்று எனக்கு ஆசை. எதை முதலில் எழுதுவது?
எழுத்தாளர் கார்முகில் எழுதிய ‘செவ்வஞ்சலி’, எழுத்தாளர் மோர்ஜியா எழுதிய ‘பெண்ணே பெண்ணாய் இரு’ கட்டுரைத் தொகுப்பு , எழுத்தாளர் சுபசூரியா ரவிக்குமார் எழுதிய ‘கடல் கதாநாயகி’ நாவல், எழுத்தாளர் திலகவதி எழுதிய ‘குடைவரை கோயில்’, குமிழ்முனை சைமன் எழுதிய ‘குளிர் உதடுகள்’ ஆகிய நூல்கள் என் மேஜையில் எப்போதும் இருந்து கொண்டிருந்தன. எப்படியும் ஒரு நாளைக்கு ஒரு நூலுக்கு விமர்சனம் எழுதிவிட வேண்டும் என நினைத்தேன். முதல் நாள் ‘குடைவரை கோயில்கள்’ பற்றி எழுதி முடித்துவிட்டேன்.
இப்போது என் முன்னால் நான்கு எழுத்தாளர்களின் புத்தகங்கள் இருக்கின்றன. எதை முதலில் எடுப்பது என யோசித்த போது, ‘குளிர் உதடுகள்’ என் கண்முன் வந்து நின்றது. அதற்கு காரணம், இந்த நூலைப் பற்றி சைமன் அறிமுகம் செய்ததுதான்.
சுமார் 50 எழுத்தாளர்களை உருவாக்கி, அவர்களது நூல்களை வெளியிட்டுவிட்டுத்தான் எனது நூலை வெளியிடுவேன் என வைராக்கியமாக இருந்த அவரது செயல், இந்த நூலில் என்ன இருக்கிறது என என்னை தேட வைத்தது. பக்கத்திற்கு பக்கம் ஏதோ வித்தியாசத்தை உணர்ந்தேன். முதல் பக்கத்திலேயே ‘பதினாறு வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் படிக்க வேண்டும்’ என்றவுடன் எனது ஆர்வம் அதிகரித்தது. அடடா… அப்படி என்ன இருக்கிறது எனப் பக்கங்களைப் புரட்டினேன். அவருக்குப் பிடித்த நா. முத்துக்குமாருக்கும், அவரைப் பிடித்து எழுத்தாளனாக்கிய தமிழாசிரியை அமுதாவுக்கும், வாசித்தால் திட்டாத அப்பாவுக்கும் நூலை சமர்ப்பணம் (ஒப்புவிக்கை) செய்திருந்ததைப் பார்த்தபோது எனக்கு ஆர்வம் கூடியது. அவருக்குப் பின்னால் ஒரு கூட்டம் இருக்கிறது; அந்த கூட்டத்தை எப்போதுமே முன்னிலைப்படுத்த வேண்டும் என அவர்களுக்கு நன்றி கடன் செலுத்தும் போது, இவர் சம்பாதித்த உள்ளங்களைக் கண்டு பெருமிதம் கொண்டேன்.
எல்லா ஊடகங்களிலும் ‘பொறுப்புத் துறப்பு’ என்றுதான் தலைப்பிடுவார்கள். இவரோ ‘பொறுப்பு ஏற்பு’ எனத் தலைப்பிட்டிருந்தது கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியது. “இந்தப் புத்தகத்தைப் படித்து உங்களுக்குத் தூக்கம் கெட்டால் அதற்கு நானே பொறுப்பு. அதற்குத் தண்டனையாக எனக்கு ஒரு புத்தகம் வாங்கிக் கொடுங்கள், நான் படித்துக்கொள்கிறேன்” எனக் கூறும் போது, இவருடைய அணுகுமுறை எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது.
இவருக்கு நிறைய எழுத்தாளர்களைத் தெரியும். இவர் நினைத்தால் அவர்களிடம் ஒரு அணிந்துரை வாங்கி இருக்கலாம். ஆனால், குமிழ்முனை பதிப்பக இணை ஆசிரியர் மோர்ஜியாவின் வரவேற்புடன் இந்த சிறுகதை தொகுப்புக்குள் நுழைகிறோம். இது மற்றுமொரு வித்தியாசம். “இந்தச் சிறுகதைகளில் பல இடங்களில் என் கதாபாத்திரம் இருக்கிறது” என அவர் கூறியதால், அந்த கதைகளில் இவர் எங்கே இருக்கிறார் என என்னை தேட வைத்துவிட்டது.
இரண்டு கதைகளை மட்டும் உதாரணத்திற்கு எடுத்துக்கொள்கிறேன்.
ரங்க ராட்டினம்:
கதையோட்டம் ஒருபுறம் இருந்தாலும், புதுமைகளின் வரவு பழமையைப் புறந்தள்ளிச் செல்கிறது என்பதைச் சுவையாகச் சொல்லி, உழைப்பும் உண்மையும் மனிதாபிமானமும் வெற்றி பெறச் செய்கிறது என்ற வரியை ஆழமாக உணர்த்தும் வண்ணம் இந்தக் கதை அமைந்திருந்தது. பப்பரப்ப மிட்டாய், ஜவ்வு மிட்டாய் எனப் பல மறைந்து வரும் வார்த்தைகள் இந்தச் சிறுகதையை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. ‘சமஞ்சப் பிள்ளை மாதிரி வாந்தி எடுக்க வைக்குது’ என ஒரு இடத்தில் எழுதியிருக்கிறார். சமஞ்சப் பிள்ளை வாந்தி எடுக்குமா? கர்ப்பிணிப் பெண்ணல்லவா? அதை விடுங்கள், கதை விறுவிறுப்பாகச் செல்லும் போது இது நமக்குத் தெரியாது. ஒரு திருவிழா என்றால் எப்படி நடக்கும் என்பதை மிகச் சிறப்பாகச் சொல்லி முடித்து, இறுதியில் அவர் ஜெயிப்பது போலவே மனதை அள்ளியிருக்கிறார். அந்த ரங்கராட்டினம் சுப்பன், குமிழ்முனை சைமன் தானோ? ஓடாத வண்டியை வ.உ.சி கல்லூரி முன்பு வைத்து, அனைவர் மனதிலும் வாசிப்பு ஓட்டத்தை ஓட வைத்திருக்கிறாரே!
குளிர் உதடுகள்:
நான் மும்பைக்கு வேலை தேடிச் செல்லும்போது ரயிலில் முன்பதிவு செய்யப்படாத (Unreserved) பெட்டியில் ஏறிச் சென்று இருக்கிறேன். அதன் பிறகு அது போன்ற வாய்ப்பு இல்லை. ஆனால், இந்த வருடம் முதல் மாதத்தில் நான் திருச்சிக்கு முன்பதிவு இல்லா பெட்டியில் சென்றேன். அப்பப்பா… எத்தனை மனிதர்கள்! இடம் பிடிக்கச் சண்டை. ஒருவன் சாமியார் ஒருவரை உட்கார விடாமல் ஓட ஓட விரட்ட, அவரோ இவனைச் சபித்துச் செல்ல, அவன் உள்ளே வந்து வெற்றி பெற்றது போலக் கழிவறை அருகில் அமர்ந்தான். உள்ளே இருந்தவர்கள் பலர், “சாமியார் ஊக்க மருந்து சாப்பிட்டு இருப்பார்” என்றும், சிலர் “சண்டை போட்டவன்தான் சாப்பிட்டு இருப்பான்” என்றும் கூற, அருகில் அமர்ந்து இருப்பவர் யாரையும் எதிர்பார்க்காமல் பாக்கு ஒன்றை எடுத்து வாயில் போட்டுக் கொண்டார். இதை ஒரு சிறுகதையாக எழுத வேண்டும் என எனக்கு ஆசை இருந்தது.
குமிழ்முனை சைமன் அந்தக் கதையைச் சிறப்பாக எழுதிவிட்டார். பாவம், செந்தூர் எக்ஸ்பிரஸ் மீது என்ன கோபமோ தெரியவில்லை, வெளுத்து வாங்கியிருக்கிறார். விரைவில் செந்தூர் எக்ஸ்பிரஸ் அதிவிரைவு ரயிலாக மாறப்போகிறது என்கிறார்கள். அதன் பிறகு ஒரு பயணம் அந்த ரயிலில் பயணித்து விடுங்கள். நல்லவேளை, சிறுவன் கையிலிருந்து அந்த மதுப்புட்டியைப் (வாஸ்தை) பிடுங்கி எறிந்துவிட்டீர்கள், சிறப்பு. ‘குளிர் உதடுகள்’ கண்டிப்பாக வருங்கால சந்ததியினர் படிக்க வேண்டும். இது போலவே செருப்புக் கால்கள், விடுமுறை காலம், தனிமையில் அவள், வெள்ளை வானில் நீல நட்சத்திரம், நவயுக மனிதன், தாத்தாவைத் தத்தெடுத்த பேரன், வாழ்வே மாயம், கனவு மெய்ப்பட வேண்டும், கேட்ட வார்த்தைகள் ஆகியவை படிக்க வேண்டிய சிறுகதைகள்.
கடைசி அட்டையில் ஏதோ எழுதியிருக்கிறாரே… “காலங்காலமாக அமைதியாக இருக்கும் இந்தச் சமூகத்தைத் தட்டி எழுப்பும் ஒரு முயற்சி. உங்கள் தூக்கம் கெட்டால் அதற்கு நானே பொறுப்பு” என எழுதியிருக்கிறாரே, அது உண்மைதான். இந்த நூலைப் படித்தால் உங்கள் தூக்கம் நிச்சயம் கெட்டுப் போகும். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த நூலை அவருடைய எழுத்தாளர்களை வைத்தே வெளியிட்டார் பாருங்கள், அதற்காக அவருக்கு ஒரு சல்யூட் அடிக்கலாம்.
முத்தாலங்குறிச்சி காமராசு
எழுத்தாளர், தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் மற்றும் கலைநன்மணி விருதாளர்


