தமிழகச் சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான விஷூ மகாஜன் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள பொதுப் பார்வையாளர்கள் எலுச்சூரி ரத்னாகர ராவ் (விளாத்திகுளம்/தூத்துக்குடி), சோடிங்புயீ (திருச்செந்தூர்/திருவைகுண்டம்), அரவிந்த் குமார் வெர்மா (ஓட்டப்பிடாரம்/கோவில்பட்டி), காவல் பார்வையாளர் ஹியர்மத் சுதிர் கல்யா, செலவினப் பார்வையாளர்கள்: அனுப் குமார் ஜெயின், சிவ பிரசாத் பால், நகுல் அகர்வால், சன்னி கச்வாஹா ஆகியோர் கலந்துகொண்டனர்.
தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் பின்வரும் நடைமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது:
நடத்தை விதிமுறைகள்: விளம்பரங்கள், பேனர்கள் மற்றும் பிளெக்ஸ் போர்டுகள் வைப்பதற்கான கட்டுப்பாடுகள்.
கண்காணிப்பு: வாகனங்களில் பணம் மற்றும் பொருட்களைக் கொண்டு செல்வதைத் தடுத்தல் மற்றும் வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்த விபரங்களை வெளியிடுதல்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள்: EVM மற்றும் VVPAT இயந்திரங்களை ஒதுக்கீடு செய்தல் மற்றும் தயார் நிலையில் வைத்தல்.
தபால் வாக்குகள்: முதியவர்களுக்கு வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதி மற்றும் அத்தியாவசியப் பணியாளர்களுக்கான மையங்கள் அமைத்தல்.
செயலிகள்: புகார்களைத் தெரிவிக்க Suvidha மற்றும் cVIGIL ஆகிய செயலிகளின் முக்கியத்துவம்.
முகவர்களுக்கான விதிகள்: வாக்குச்சாவடி முகவர்களின் தகுதிகள், நியமனம் மற்றும் வாக்குப்பதிவு நாளன்று அவர்கள் பின்பற்ற வேண்டிய விதிகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும், மறுவரையறை செய்யப்பட்ட வாக்குச்சாவடிகளின் விபரங்களும் கட்சிப் பிரதிநிதிகளிடம் பகிரப்பட்டன. கூட்டத்தின் இறுதியில், தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளிடம் கருத்துக்களைக் கேட்டறிந்தனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மூ. குருச்சந்திரன், நிலஎடுப்பு வருவாய் அலுவலர் சங்கரலிங்கம், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஷீலா, தேர்தல் வட்டாட்சியர் தில்லைபாண்டி மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்


