தூத்துக்குடியில் குமிழ்முனை புத்தக வண்டியின் இரண்டாவது பிறந்தநாள் விழா, சிதம்பரனார் நினைவு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதற்கு குமிழ்முனை சைமன் என்னை அழைத்திருந்தார். சைமன் எனக்கு மிகவும் பிடித்தமானவர்; சிறந்த வாசிப்பு அனுபவம் கொண்டவர். தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி முன்பு ‘வாசிப்பு வண்டி’ மூலம் மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தி வருபவர். சமீபத்தில் நெல்லையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் எனது புத்தகங்களைச் சுமார் 60 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்து தந்தவர். என் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட அவர், சுமார் 50 புதிய இளம் எழுத்தாளர்களை உருவாக்கியுள்ளார்.
“50 எழுத்தாளர்களை உருவாக்கிய பிறகுதான் நான் புத்தகம் எழுத வேண்டும்” என்று அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு, இன்று தனது முதல் நூலை வெளியிட்டார். நிகழ்ச்சிக்கு வருமாறு என்னிடம் கூறியிருந்தாரே தவிர, யாரெல்லாம் வருவார்கள் என்று சொல்லவில்லை. நான் அங்கு சென்ற பிறகுதான் தேரிக்காட்டு எழுத்தாளர் உட்பட பல நண்பர்கள் இருப்பதைக்கண்டு மகிழ்ந்தேன். அங்கு நான் பார்த்தவர்கள் அனைவரும் புதுமுகங்கள்; தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்தார்கள்.
நான் தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது (2020) பெற்ற போது, எனக்குத் தூத்துக்குடியில் பாராட்டு விழாவே நடைபெறவில்லை. கழுகுமலை, கோவில்பட்டி, திருநெல்வேலி, அம்பை, ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர் எனப் பல இடங்களில் பாராட்டு விழாக்கள் நடந்தும், மாவட்டத் தலைநகரான தூத்துக்குடியில் நடைபெறவில்லை. அதற்குக் காரணம், தூத்துக்குடியில் போதுமான தமிழ் அமைப்புகளோ அல்லது எழுத்தாளர்களோ இல்லையோ என்று நான் நினைத்தேன்.
ஆனால், தற்போது தூத்துக்குடி அந்த நிலையை மாற்றி வருகிறது. குறிப்பாக, திருநெல்வேலியில் எவ்வளவு இலக்கிய வட்டங்கள் உண்டோ, அதேபோல் இங்கேயும் இலக்கிய வட்டங்கள் பெருகி வருகின்றன. தூத்துக்குடி மாவட்ட எழுத்தாளர்களின் சிறுகதைகளை நான் சேகரித்த போது, சுமார் 100 எழுத்தாளர்களைக் கண்டேன். புத்தகக் கண்காட்சியில் பல எழுத்தாளர்களின் நூல்களைக் காட்சிப்படுத்தினோம். தற்போது தம்பி சைமன், 20 வயதுக்குட்பட்ட 50 இளம் எழுத்தாளர்களை இங்கே ஒருங்கிணைத்திருந்தார். இது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அவர்களோடு உரையாடிய போது, என்னை அறியாமலேயே ஆனந்தக் கண்ணீர் வந்துவிட்டது.
நான் உள்ளே நுழையும் போதே, குமிழ்முனை வாசிப்பு வண்டி புத்தகங்களால் அலங்கரிக்கப்பட்டு விழா அரங்கு முன்பு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. குமிழ்முனை பதிப்பகத்தின் அனைத்துப் புத்தகங்களும் மக்களின் பார்வைக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன. அரங்கம் முழுவதும் குமிழ்முனை கடந்து வந்த பாதையைப் புகைப்படங்களாகக் காட்சிப்படுத்தியிருந்தார்கள். அரங்கமானது குமிழ்முனை எழுத்தாளர்களின் புகைப்படங்கள் மற்றும் வாசகங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
நிகழ்வின் தொடக்கமாக எழுத்தாளர் மோர்ஜியா அனைவரையும் வரவேற்றார். எழுத்தாளர் சுபசூரியா குமிழ்முனையின் ஆண்டறிக்கையை வாசித்தார். கலைவளர்மணி சக்திவேல் அவர்கள், நெடுஞ்சாலைக் கவிஞர் செல்வராஜ் அவர்களின் வாழ்த்துச் செய்தியை வாசித்தார். போராட்ட வீரர் ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அவரது வாழ்க்கை வரலாற்றைச் ‘செவ்வஞ்சலி’ என்ற பெயரில் சிறு புத்தகமாக வெளியிட்டு அனைவருக்கும் வழங்கினார்கள்.
எழுத்தாளர் கார்முகில் எழுதிய இந்த நூலைத் தேரிக்காடு இலக்கியவாதி கண்ணகுமார விஸ்வரூபன் வெளியிட, அதன் முதல் பிரதியை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, எழுத்தாளர் மோர்ஜியா எழுதிய “பெண்ணே பெண்ணாய் இரு” என்ற கட்டுரைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. ஆழி மாத இதழின் ஆசிரியர் அருட்தந்தை சபின்சன் நூலை வெளியிட, வ.உ.சி கல்வியியல் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் குரு ராஜதுரை மற்றும் தமிழாசிரியை கனிமொழி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
எழுத்தாளர் சுபசூரியா ரவிக்குமார் எழுதிய “கடல் கதாநாயகி” நாவலைச் சிதம்பரனார் நினைவு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை சங்கரேஸ்வரி வெளியிட, முதல் பிரதியை முத்துலெட்சுமி மற்றும் பபிலா ஆகியோர் பெற்றுக்கொண்டனர். குமிழ்முனை பதிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளரும் எழுத்தாளருமான சைமன் எழுதிய “குளிர் உதடுகள்” சிறுகதைத் தொகுப்பைக் குமிழ்முனை எழுத்தாளர்கள் வெளியிட, வாசகர்கள் பெற்றுக்கொண்டார்கள். மேலும், எழுத்தாளர் திலகவதி எழுதிய குடைவரை கோயில் நூல் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் புலவர் சங்கரலிங்கம், ஷெரீப், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தாளமுத்து நகர் கிளைத் தலைவர் செல்வின், புலவர் முத்துசாமி, எழுத்தாளர் மாரிமுத்து உட்படப் பலர் கலந்துகொண்டனர். திருச்சி தொழிலதிபர் கோபால்தாஸ் வழங்கிய நாட்குறிப்பேடுகள் இளம் எழுத்தாளர்களுக்குப் பரிசாக வழங்கப்பட்டன. இறுதியில் குமிழ்முனை சைமன் நன்றி கூறினார்.
அனைவருக்கும் சுடச்சுட மதிய உணவு உபசரிப்போடு வழங்கப்பட்டது. வெளியிடப்பட்ட புத்தகங்களை நான் விலை கொடுத்து வாங்கிக்கொண்டேன். அதன் பின் அனைவரும் அன்போடு இணைந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டோம்; அது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.
வாழ்த்துகள் சைமன்! உங்களைப் போன்றவர்கள் தூத்துக்குடிக்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கே தேவை. உங்களுக்கு எப்போதும் எனது ஆதரவு உண்டு. எனது பரிந்துரையில் உங்களுக்கு ஒரு விருது வாங்கிக் கொடுத்துள்ளேன், அதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. விரைவில் உங்களுக்கு அரசு விருது கிடைக்க வேண்டும்; அதை நோக்கிப் பயணியுங்கள். அனைத்துப் புது எழுத்தாளர்களுக்கும், என்னோடு பங்கேற்ற மற்ற எழுத்தாளர்களுக்கும் எனது நன்றிகள்.


