பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஏப்ரல் 1ஆம் தேதி (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பத்திரம் மற்றும் நகல் எழுதுவோர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து சங்கத்தின் மாநில தகவல் தொடர்பு செயலாளர் சிவசங்கரராமன் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், “பங்குனி உத்திரத் திருவிழா அன்று தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பொதுமக்கள் தங்களது குலதெய்வ வழிபாடு செய்வது வழக்கம்.
வேலை மற்றும் தொழில் நிமித்தமாக வெளியூர்களில் வசிப்பவர்களும் இத்திருநாளில் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு வந்து வழிபாட்டில் கலந்துகொள்வார்கள். இந்த விழாவின் முக்கியத்துவத்தைக் கருதி, ஏற்கனவே திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 1-ஆம் தேதியை உள்ளூர் விடுமுறை நாளாக அறிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலும் பொதுமக்கள் தடையின்றி வழிபாடு செய்ய ஏதுவாக, ஏப்ரல் 1-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட வேண்டும். அதற்கு ஈடாக, ஏப்ரல் 11, 2026 (இரண்டாம் சனிக்கிழமை) அன்று வேலை நாளாக அறிவிக்கலாம் என்றும் அந்த மனுவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


