தூத்துக்குடி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக் கோரி ஆறுமுகநேரியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர், கடந்த 11-ஆம் தேதி மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து குளத்தூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும், குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படாததைக் கண்டித்து, மாணவியின் உடலை வாங்க மறுத்து அவரது பெற்றோரும், கிராம மக்களும் கடந்த மூன்று நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்தத் துயரச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாகக் கண்டுபிடிக்க வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் செந்தூர் மகாராஜன் தலைமையில் இன்று காலை, சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், சுமார் 50-க்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி – திருச்செந்தூர் பிரதான சாலையில் நடுரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த ஆறுமுகநேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போராட்டம் நீடித்ததால், திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ்குமார் நேரில் வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். “குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்” என அவர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக தூத்துக்குடி – திருச்செந்தூர் பிரதான சாலையில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.


