வேடநத்தம் சிறுமி படுகொலை வழக்கில் குற்றவாளிகளுக்குத் தக்க தண்டனை பெற்றுத்தர முதல்வர் உறுதியாக நடவடிக்கை எடுப்பார் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் பள்ளி மாணவி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், உண்மை குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தருவதில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உறுதியாக இருப்பதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
வேடநத்தம் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்தினரையும், அங்கு சாலை மறியலில் ஈடுபட்டு வரும் பொதுமக்களையும் அமைச்சர் கீதா ஜீவன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, இந்த வழக்கில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கமளித்தார்.
பள்ளி மாணவி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை விரைந்து கண்டறியும் பணியில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தமிழ்நாடு அரசு இயந்திரம் இந்த விஷயத்தில் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. மாணவியின் பெற்றோரும், பொதுமக்களும் காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். உண்மை குற்றவாளிகள் மிக விரைவில் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்,” என்றார்.
மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதிலும், அத்தகைய குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்குக் கடுமையான தண்டனையைப் பெற்றுத் தருவதிலும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் சமரசமற்ற முறையில் உறுதியாக இருக்கிறார் என்றும், இந்த வழக்கில் நீதி நிலைநாட்டப்படும் என்றும் அமைச்சர் கீதா ஜீவன் பொதுமக்களிடம் உறுதி அளித்தார்.


