திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார தின விழாவை முன்னிட்டு, பாதுகாப்புப் பணிகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அய்யா வைகுண்டரின் 194-வது அவதார தின விழா இன்று (04.03.2026) வெகுவிமர்சையாக நடைபெறுகிறது. இதையொட்டி, திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் கோவிலில் சிறப்பு வழிபாடுகளும், விழாக்களும் நடைபெற உள்ளன.
இந்த விழாவைக் முன்னிட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன் உத்தரவின் பேரில், திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோயில் வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க காவல்துறையினர் இரவு பகலாகத் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடற்கரைப் பகுதியில் புனித நீராடும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி, சீருடை மற்றும் சாதாரண உடையில் ஆண் மற்றும் பெண் காவலர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். விழா ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்புப் பணிகளை ஆய்வு செய்ய, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேற்று (03.03.2026) மாலை நேரில் வருகை தந்தார்.
கோயில் வளாகம் மற்றும் கடற்கரைப் பகுதிகளைப் பார்வையிட்ட அவர், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்குத் தேவையான அறிவுரைகளை வழங்கினார். பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி விழாவினைச் சிறப்பாக நடத்தி முடிக்க உத்தரவிட்டார். ஆய்வின் போது, திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார், திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் மதுரை வீரன் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.


