தூத்துக்குடி – சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்க வேண்டும் என்று தூத்துக்குடி தன்பாடு உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு தூத்துக்குடி தன்பாடு உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் பொன்பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் அனுப்பியுள்ள மனுவில், “ஹைதராபாத் (காச்சிகுடா) மற்றும் மதுரை இடையே இயக்கப்பட்டு வந்த வாராந்திர சிறப்பு ரயிலைத் தூத்துக்குடி வரை நீட்டித்து, அதனை நிரந்தர ரயிலாக மாற்ற ஒப்புதல் வழங்கியதற்காக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்-க்குச் சங்கம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.
இந்தச் சேவையின் மூலம் தூத்துக்குடி மக்களுக்கு நேரடி வட இந்திய இணைப்பு கிடைத்துள்ளது. தொழில், வர்த்தகம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு நிமித்தமாகப் பயணிப்போருக்குப் பெரும் உதவியாக அமைந்துள்ளது. தென் மாவட்டங்களுக்கும் தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களுக்கும் இடையே நிலையான போக்குவரத்துத் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் நிலையில், தூத்துக்குடி மக்களின் நீண்ட நாள் தேவையாக இருக்கும் தூத்துக்குடி – சென்னை வந்தே பாரத் ரயில் சேவை குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் எனச் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளார்.


