தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் அமைக்கப்பட்டு வரும் அனல் மின் நிலையத்தின் முதல் அலகில் மேற்கொள்ளப்பட்ட சோதனை ஓட்டத்தின் மூலம் 200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில், சுமார் ரூ.13,077 கோடி மதிப்பீட்டில் உடன்குடி அனல் மின் திட்டப் பணிகள் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டன. இங்கு தலா 660 மெகாவாட் திறன் கொண்ட 2 சூப்பர் கிரிட்டிக்கல் அலகுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக 1,320 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த மின் நிலையத்திற்குத் தேவையான நிலக்கரியைத் தடையின்றி வழங்க, கடலோரப் பகுதியிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் பிரத்யேக நிலக்கரி இறங்கு தளம் அமைக்கப்பட்டுள்ளது. பெரிய பனாமாக்ஸ் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் 18 மீட்டர் ஆழத்தில் இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி, கன்வேயர் பெல்ட் மூலம் நேரடியாக மின் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும். தற்போது இதற்கான கட்டாய செயல்பாட்டுச் சான்றிதழுக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர். தற்போதைய சோதனை ஓட்டத்திற்காக, தூத்துக்குடி அனல் மின் நிலையத்திலிருந்து சாலை வழியாக சுமார் 10 ஆயிரம் டன் நிலக்கரி கொண்டு வரப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற சோதனையின் போது, முதல் அலகின் பாய்லர் இயக்கப்பட்டு தெற்கு பிராந்திய மின்சார கட்டமைப்புடன் இணைக்கப்பட்டது. சோதனையின் போது சராசரியாக 120 மெகாவாட் மின்சாரமும், அதிகபட்சமாக 200 மெகாவாட் வரையிலும் எட்டப்பட்டது.
சோதனையின் போது கண்டறியப்பட்ட சிறிய தொழில்நுட்பச் சிக்கல்களைச் சரிசெய்ய முதல் அலகு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பணிகள் முடிந்தவுடன் மீண்டும் இயக்கப்படும். 2-வது அலகைப் பொறுத்தவரை டர்பைன் தொடர்பான சில பணிகள் நிலுவையில் உள்ளன. தமிழகத்தின் மின் உற்பத்தியை அதிகரிப்பதில் உடன்குடி திட்டம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
“முதல் அலகு மார்ச் மாதத்திலும், இரண்டாவது அலகு மே மாதத்திலும் முழுமையான செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கோடைக் காலத்தில் அதிகரிக்கப்போகும் தமிழகத்தின் மின் தேவையைப் பூர்த்தி செய்யப் பெரிதும் உதவும்” என எரிசக்தி துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


