தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல நிர்வாகிகள் தேர்தலில் எஸ்.டி.கே. ராஜன் அணியினர் அமோக வெற்றி பெற்று மீண்டும் திருமண்டல நிர்வாகத்தைப் கைப்பற்றினர்.
தூத்துக்குடி -நாசரேத் திருமண்டலத்தின் இறுதி கட்ட தேர்தல் நாசரேத் பரி. யோவான் பேராலயத்தில் வைத்து நேற்று (16 ந் தேதி) நடைபெற்றது. இத் தேர்தலை தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல நிர்வாகி ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி தலைமையேற்று நடத்தினார்.
இத்தேர்தலில் எஸ்.டி.கே. ராஜன் அணி சார்பில் போட்டியிட்ட குருவானவர் மோசஸ் ஜெபராஜ் , உபதலைவராகவும் குருவானவர் டி.ஜி.ஏ. தாமஸ் குருத்துவச் செயலராகவும், எஸ்.டி.கே. அணித் தலைவர் எஸ்.டி.கே. ராஜன் லே செயலராகவும், டி.கே.எம்.ஜான்சன் பொருளாளராகவும் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
இதைத் தொடர்ந்து திருமண்டல செயற்குழு பிரதிநிதிகள் மற்றும் சினாடு பேரவை தேர்தல்கள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது. இதிலும் எஸ்.டி.கே. ராஜன் அணியினர் பெரும்பான்மையாக வெற்றி பெற்றனர்.
இத் தேர்தல்கள் அனைத்தையும் தூத்துக்குடி _ நாசரேத் திருமண்டல நிர்வாகி ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி தலைமையில், தேர்தல் அதிகாரிகளான ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் ரெத்தினராஜ் மற்றும் ஜான் ஆர்.டி. சந்தோஷம் ஆகியோர் நடத்தினர்.
இத் தேர்தலையொட்டி நாசரேத் தூய யோவான் பேராலய வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முன்னதாக நாசரேத் பரி. யோவான் பேராலயத்தில் நேற்று (16ம்தேதி) காலை 8 மணிக்கு பரிசுத்த திருவிருந்து ஆராதனை பேராலய தலைமை குருவானவர் ஹென்றி ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்றது.


