தூத்துக்குடி மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை வாகன ஓட்டுநர் தாக்கப்பட்டதைக் கண்டித்து, சக பணியாளர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட சம்பவம் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி பேரூரணி பகுதியைச் சேர்ந்த சித்திரை செல்வம், தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மை வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இன்று காலை அவர் தனது குழுவினருடன் சேது ராஜா தெரு பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வசிக்கும் நவீன் என்பவர், தனது வீட்டின் அருகே உள்ள மண்ணை அள்ளுமாறு கூறியுள்ளார்.
இதற்கு ஓட்டுநர் சித்திரை செல்வம், “உயரதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பின்னரே மண்ணை அள்ள முடியும்” என்று பதிலளித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த நவீன், சித்திரை செல்வத்தைத் தகாத வார்த்தைகளால் பேசி, பிளாஸ்டிக் குழாயால் பலமாகத் தாக்கியதோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
தாக்குதல் குறித்துத் தகவல் அறிந்த 20-க்கும் மேற்பட்ட தூய்மை வாகன ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்கள், தங்களது வாகனங்களுடன் வடபாகம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். பணியில் இருந்த அரசு ஊழியரைத் தாக்கிய நவீன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் புகார் மனு அளித்தனர்.
பணியாளர்களின் புகாரைத் தொடர்ந்து, உடனடியாகச் செயல்பட்ட வடபாகம் காவல்துறையினர் நவீன் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். அவரிடம் மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது. பாதுகாப்பான சூழலில் பணிபுரிய வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் நடத்திய இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும், பரபரப்பும் நிலவியது.


