ஸ்ரீவைகுண்டம் அருகே வல்லநாடு கிள்ளிக்குளம் வ.உ.சி.வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இதில் 4 ஆம் ஆண்டு பயின்று வரும் மாணவ மாணவிகள் கடந்த 45 நாட்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று விவசாயிகளுடன் தங்கி அவர்களுடன் கள ஆய்வு மேற்கொண்டதுடன் அவர்களிடம் கற்றுக் கொண்டவை, மாணவ மாணவிகளின் கண்டுபிடிப்பு உள்பட பல்வேறு விஷயங்களை கண்காட்சியாக இன்று கல்லூரி ஆடிட்டோரியத்தில் வைத்தனர்.
இதன் தொடக்க விழா நடந்தது. இதில் தூத்துக்குடி மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து மாணவ மாணவிகள் காட்சிப்படுத்தி வைத்திருந்த அனைத்து விவசாயம் சார்ந்த கண்காட்சிகளையும் பார்வையிட்டு மாணவ மாணவிகளிடம் விளக்கங்கள் கேட்டறிந்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண் துணை இயக்குநர் மனோரஞ்சிதம், கல்லூரி டீன் தேரடி மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


