தூத்துக்குடியில் தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தனர்.
தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு காலை உணவு வழங்கும் விரிவாக்கத் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா, அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் பிரியங்கா முன்னிலை வகித்தார். சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் மாநகராட்சி மேயர் என்.பி. ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்துகொண்டு, தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவை வழங்கி இத்திட்டத்தை தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்ததாவது: “தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி மாநகராட்சியின் 14 மண்டலங்களில் பணிபுரியும் 1,702 தூய்மைப் பணியாளர்களுக்கு இன்று முதல் காலை உணவு வழங்கப்படுகிறது. இது தவிர, ஷிப்ட் அடிப்படையில் பணியாற்றும் 42 பேருக்கு மதிய உணவும், 48 பேருக்கு இரவு உணவும் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக தூத்துக்குடி மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ஆண்டுக்கு ரூபாய் 2 கோடியே 75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இந்தநிகழ்ச்சியில் மாநகராட்சி பொறியாளர் தமிழ்ச்செல்வன், நகர் நல அலுவலர் சரோஜா, சுகாதார அலுவலர் ராஜபாண்டி, மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், மும்தாஜ், தனலட்சுமி, மரிய கீதா, ராமு அம்மாள், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் பிரபாகரன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் ஏராளமான தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.


