பருவமழை பொய்த்ததால் கருகிய மிளகாய் பயிர்களுக்கு உரிய நிவாரணம் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த சில மாதங்களாக விளாத்திகுளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதிய மழை இல்லாததால், மானாவாரி பயிரான மிளகாய் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வறட்சியின் காரணமாக செடிகளுக்குப் போதிய நீர் கிடைக்காத நிலையில், தற்போது செங்கால் நோய் மற்றும் வாடல் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி பயிர்கள் அனைத்தும் கருகி வருகின்றன.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், கருகிய மிளகாய் செடிகளைக் கைகளில் ஏந்தியபடி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோஷங்களை எழுப்பினர். ஏக்கருக்கு 40,000 முதல் 50,000 ரூபாய் வரை முதலீடு செய்துள்ள விவசாயிகள், தற்போது ஒரு பைசா கூட வருமானம் இன்றி முழுமையான நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாகக் கண்ணீர் மல்கத் தெரிவித்தனர்.
விளாத்திகுளம் மற்றும் புதூர் வட்டாரங்களை உடனடியாக ‘வறட்சி பாதித்த பகுதிகளாக’ அரசு அறிவிக்க வேண்டும். வேளாண் துறை அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து, பயிர் சேத மதிப்பீட்டை உடனடியாகத் தாக்கல் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
பயிர் காப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில், வட்டாட்சியரைச் சந்தித்து தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை விவசாயிகள் அளித்தனர்.


