கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
பிரசித்தி பெற்ற கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவிலில் கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. 12 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதையடுத்து கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 25-ஆம் தேதி கோவில் முன்புள்ள மைதானத்தில் யாகசாலை பந்தல் அமைக்கும் பணிக்கு கால்நாட்டு விழா நடந்தது. கோவிலின் வலதுபுறம் மற்றும் முன்புறம் என 2 யாகசாலை பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், மொத்தம் 42 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, நேற்று காலை 7 மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
முன்னதாக, கோவில் நடை அதிகாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. காலை 6.30 மணிக்கு விளா பூஜையும், காலை 7 மணிக்கு மேல் திருமுறை பாராயணம், விக்னேஷ்வர பூஜை, புன்யாஹவாசனம், பஞ்சகவ்ய பூஜை, மகா கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம், தன பூஜை, தான்ய பூஜை, கோ பூஜை, பிரம்மச்சாரி பூஜை, பஞ்சமுக விநாயகர் அபிஷேகம், தீபாராதனை, மகா அனுக்ஞை ஆகியவை நடைபெற்றன. சிவாச்சாரியார்கள் ரகு பரசுராம பட்டர் தலைமையில் யாகசாலை பூஜை பொருட்களுடன் கோவிலை வலம் வந்தனர். மாலை 5 மணிக்கு மேல் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
இன்று (புதன்கிழமை) காலை சாந்தி ஹோமம், சுவாசினி பூஜை, சுமங்கலி பூஜை, அஸ்வ பூஜை, மாலை 5 மணிக்கு மேல் ம்ருத்ஸங்கரணம், அங்குரார்பணம், பாலிகாஸ்தாபனம், சோமகும்ப பூஜை, பேரீதாடனம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி ஆகியவை நடக்கின்றன. நாளை(வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு மேல் முதல் கால யாகசாலை பூஜை, திரவியாஹூதி, மகா பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெறுகின்றன. நாளைமறுநாள் காலை 8 மணிக்கு மேல் 2-ம் கால யாகசாலை பூஜை, மாலையில் 3-ம் கால யாகசாலை பூஜையும், வருகிற 24-ஆம் தேதி காலை 4-ம் கால யாகசாலை பூஜை, மாலையில் 5-ம் கால யாகசாலை பூஜை நடைபெறும்.
வருகிற 25-ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெறுகின்றன. அதிகாலை 4.30 மணிக்கு கடங்கள் யாகசாலையில் இருந்து கோவிலுக்கு புறப்படுதல், 5 மணிக்கு மேல் ராஜகோபுரம், சாலை கோபுரம், விமானங்கள், அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு பூவனநாதசுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், தீபாராதனை நடைபெறும். காலை 11 மணிக்கு மூலவர் சுவாமி, அம்மனுக்கு மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனையும், இரவு 7 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெறும்.
ஏற்பாடுகளை இணை ஆணையர் அன்புமணி, துணை ஆணையர் செல்வி, செயல் அலுவலர் (கூடுதல் பொறுப்பு) பாலமுருகன், ஆய்வாளர் சிவகலைப்பிரியா, அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு, அறங்காவலர்கள் சுபாஷ் சண்முகராஜ், நிறுத்திய லட்சுமி, ரவீந்திரன், திருப்பதி ராஜா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


