ஒரு காலத்தில் தூத்துக்குடி மாவட்டம் விட்டிலாபுரம் கிராமத்தில் வெங்கிட குரு ரெட்டியார் நாச்சியார் அம்பாள் தம்பதி வாழ்ந்து வந்தனர். இவர்கள் முனைஞ்சிப்பட்டியில் உள்ள பார்வதியம்மன் மீது தீவிர பற்று கொண்டவர்கள். வெள்ளிக்கிழமை தோறும் நடந்தே முனைஞ்சிபட்டி சென்று பார்வதி அம்மனுக்கு மலர்களைச் சூடி நன்றாக அலங்கரித்து வணங்கி நிற்பார்கள். பார்வதி தாயை வாரம் தோறும் பார்க்காவிட்டால் அவர்களுக்கு அன்னம் இறங்காது. அந்த அளவுக்கு அம்மன் மீது பக்தி வைத்திருந்தனர்.
காலங்கள் உருண்டன. இருவரும் முதுமை அடைந்தனர். இதனால் அவர்களால் நடந்து முனைஞ்சிப்பட்டி செல்லமுடியவில்லை. ஆகவே, அன்னையை எப்படியாவது விட்டிலாபுரம் கொண்டு வந்து வணங்க வேண்டும் என்று முடிவு செய்தனர். தங்களோடு விட்டிலாபுரம் வருமாறு பார்வதி தேவியிடம் மனமுருக வேண்டினர். பின்னர் பூசாரியிடம், ‘‘ஒரு மஞ்சளில் அம்மனை ஆவாஹனம் செய்து தாருங்கள். நாங்கள் அவரை எங்கள் ஊருக்கு கொண்டு செல்கிறோம்’’ என்றார். அதைக் கேட்டு பூசாரி அம்மனிடம் உத்தரவு கேட்க தாயும் உத்தரவு கொடுத்தார்.
உடனே ஒரு மஞ்சளில் அம்மனை ஆவாஹனம் செய்து மஞ்சள் துணியில் மூடி நாச்சியார் அம்பாளின் முந்தானையில் வைத்தார். நாச்சியார் முந்தானையைப் பத்திரமாகப் பிடித்துக் கொண்டு விட்டிலாபுரம் நோக்கி புறப்பட்டார். அப்போது பூசாரி, ‘‘தாயே, நீ அம்மனைப் பத்திரமாகக் கொண்டு செல்ல வேண்டும். இடையில் எங்கேயாவது அம்மனை இருத்தினால் உன்னை விட்டு நழுவி விடுவாள். ஆகவே, நீ பத்திரமாக கொண்டு செல்’’ என்று கூறினார். நாச்சியாரும் தலையசைத்தவாறு தனது கணவருடன் புறப்பட்டார். அது நல்ல வெயில் காலம் என்பதால் தம்பதி மிகவும் கஷ்டப்பட்டு நடந்தனர். மடியில் இருக்கும் பார்வதி அம்மன் அருளால் தெம்பாக நடைபோட்டனர். அய்யனார்குளம் பட்டி குளக்கரைக்கு வந்த போதுதான் அம்மன் தனது திருவிளையாடலை ஆரம்பித்தாள். அருமையான குளக்கரை, அதைச் சுற்றி பச்சை பசேலுடன் காணப்படும் வயல்வெளி, அருகிலேயே குன்று எனக் காட்சி அளித்த அந்த இடம் அம்மனுக்கு மிகவும் பிடித்து விட்டது. அந்த இடத்தில் அமர்ந்து அனைவருக்கும் அருள்பாலிக்க பார்வதியம்மன் திட்டமிட்டு நாச்சியாரை மிகவும் சோர்வடையச் செய்தார்.
வெயில் கொடுமையில் நடக்க முடியாத நாச்சியார். அய்யனார்குளம்பட்டி குளத்துக்கரையில் உள்ள புளியமரத்தின் அடியில் அமர்ந்து விட்டார். தாகம் வாட்டவே கணவரிடம் தண்ணீர் கேட்டார். அருகில் உள்ள குளத்துக்கு அவர் தண்ணீர் எடுக்க சென்றார்.
அப்போது நாச்சியாருக்கு மயக்கம் ஏற்பட்டது. கீழே அவர் சாய்ந்த போது முந்தானையில் இருந்து பார்வதி அம்மன் நழுவி கீழே விழுந்தார். கணவர் வந்து தண்ணீர் கொடுத்ததும் மயக்கம் தெளிந்து நாச்சியார் கண் விழித்து பார்த்தபோது முந்தானையில் பார்வதி அம்மனை ஆவாஹனம் செய்து வைத்திருந்து மஞ்சளை காணவில்¬ல். அதிர்ந்து போன நாச்சியார், தாயே இது என்ன சோதனை என்று கதறினாள். அக்கம் பக்கம் தேடிய போது ஓரிடத்தில் மஞ்சள் கிடப்பதைப் பார்த்தார். அதை எடுக்க முயன்ற போது கையில் வர மறுத்தது. ‘‘தாயே, இது என்ன சோதனை’’ என்று எண்ணியவாறு மீண்டும் அந்த மஞ்சளை எடுக்க முயன்றார். அப்போது தான் பூசாரி சொன்னது நினைவுக்கு வந்தது. பார்வதி அம்மன் இந்த இடத்தில் அமர்ந்து மக்களுக்கு அருள்பாலிக்க விரும்புகிறார் என்பதை உணர்ந்து அங்கே சிறிய ஓலை குடிசை கட்டி அம்மனை வணங்க ஆரம்பித்தார்.
அம்மனின் அருளால் இங்கு வந்து வணங்குபவர்களுக்கு எல்லாம் வேண்டிய வரம் கிடைத்தது. இதனால் அப்பகுதியில் அம்மனின் புகழ் பரவ ஆரம்பித்தது. நாச்சியாரும் அவரது கணவரும் அய்யனார்குளம் பட்டி வந்து பார்வதியம்மனை வணங்கி சென்றனர்.
ரெட்டியாருக்கு ஒரு குறிப்பிட்ட தருணத்தில் தான் இறக்கும் காலம் தெரிய வந்தது. உடனே தனது மனைவியைக் கூப்பிட்டு, ‘‘நாச்சியார், எனது உயிர் பிரிய போகிறது. அப்போது என் வலது கால் கட்டைவிரலை வெட்டி மாடக்குழியில் வைத்து விடு. அந்த விரல் எப்போது துடிப்பை நிறுத்துகிறதோ அப்போது விரலை மேளதாளத்துடன் தாமிரபரணி எடுத்துக் கொண்டு தாமிரபரணி கரைக்குச் செல். அங்குள்ள தீர்த்தத்தில் மூன்று கை தண்ணீரை எடுத்து ஒரு நெருப்பை ஏற்படுத்தி அதற்குள் இறங்கு. நாம் இரண்டு பேரும் நற்கதியடையலாம்’’ என்று கூறினார்.
இதைக் கேட்டு நாச்சியார் அதிர்ந்தார். ஆனால், இறைவனின் முடிவை யாரால் தடுக்க முடியும். அந்தக் குறிப்பிட்ட காலத்தை இருவரும் நோக்கி காத்து இருந்தனர். அதே போல் ரெட்டியாரின் ஆவி பிரிந்தது. அவர் சொன்ன படியே வலது கால் கட்டை விரலை வெட்டி மாடக்குழியில் வைத்தார் நாச்சியார். ஒரு நாள் ரெட்டியாரின் கட்டைவிரல் தனது துடிப்பை நிறுத்தியது. உடனே நாச்சியார் மேளதாளம் முழங்க அதை எடுத்துக்கொண்டு முத்தாலங்குறிச்சி தாமிபரணி நதிக்கரையை நோக்கி வந்தார். அங்கு மிகப்பெரிய நெருப்பை உருவாக்கினார். பின்னர் தாமிரபரணியில் மூழ்கினார். மூன்று தடவை அவர் தனது கைகளால் தாமிபரணி தண்ணீரை முகர்ந்தார். முதலில் விபூதி வந்தது, இரண்டாவதாக மஞ்சள்பொடியும், மூன்றாவவதாகக் குங்குமும் வந்தது.
நனைந்த உடையுடன் கணவரின் கட்டை விரலைக் கையில் வைத்துக் கொண்டு தீக்குள் இறங்கினார். அப்போது அக்னி ஜ்வாலை அவரை வாரி அணைத்து ஏற்றுக் கொண்டது. அப்போது அக்னியில் இருந்து இரண்டு புறாக்கள் வானத்தினை நோக்கி பறந்தன.
காலங்கள் கடந்தன. உறவினர்கள் கனவில் நாச்சியார் தோன்றினார். நானும் என் கணவரும் தானே முளைத்த லிங்கமாய் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ளோம்.
நான் இறங்கிய நெருப்பு ஜ்வாலையில் உருவம் உள்ளது. அதை எடுத்து வணங்கி வந்தால் நான் உங்களுக்குக் கேட்ட வரம் தருவோம் என்று கூறினார். அதன்படி உறவினர்கள் தாமிரபரணி ஆற்றங்கரையில் சென்று பார்த்த போது தானே தோன்றிய உருவம் கிடைத்தது. அதை எடுத்து வணங்கி வந்ததால் அவர்களுக்குக் கேட்ட வரம் கிடைத்தது. தீ ஜ்வாலையில் இருந்த தோன்றியதால் நாச்சியார் தீப்பாச்சியம்மன் என்றழைக்கப்பட்டார். ஆனால், நாச்சியார் மூலம் உருவான பார்வதியம்மனையும், முத்தாலங்குறிச்சி தாமிரபரணி கரையில் உள்ள தீப்பாச்சி அம்மனையும் ஓரே நேரத்தில் வணங்க முடியவில்லை. ஆற்றில் வெள்ளம் வந்தால் முத்தாலங்குறிச்சிக்கு செல்லமுடியாது. எனவே, தீப்பாச்சியம்மனையும் அய்யனார்குளம் பட்டிக்குக் கொண்டு வந்து ஓரே இடத்தில் வைத்து வணங்க ஆரம்பித்தனர்.
ஓலை குடிசையாக இருந்த கோயில் மிகப்பெரிய கான்கிரீட் கட்டிடமாக மாறியது. இந்த அம்மனை வணங்கியவர்கள் தற்போது மிகப்பெரிய பதவியில் இருப்பதுடன், தொழிலிலும் சிறப்புற்று விளங்குகிறார்கள். மதுரை போன்ற பெரிய நகரங்களில் இவர்கள் தொழில் செய்து வருகின்றனர்.
கோயிலுக்கு கிழக்கு நோக்கி வாசல் உள்ளது. கருவறையில் பார்வதியம்மன் உள்ளார். அடுத்த அறையில் நாச்சியாரம்மனும், ரெட்டியாரும் இணைந்து காட்சியளிக்கும் தீப்பாச்சியம்மன் உள்ளார்.
கோயில் முன்பு இங்கு வழிபாடு செய்து பயனடைந்தவர்கள் மிக அழகான முறையில் மணிமண்டபம் அமைத்து கொடுத்துள்ளனர். கன்னி மூலையில் வல்லப மகா கணபதியும் அடுத்த மூலையில் பாலசுப்பிரமணியரும் உள்ளனர். கோயிலின் தல விருட்சமாகப் பார்வதியம்மன் நாச்சியார் மூலம் வந்து தங்கிய புளியமரம் உள்ளது. இந்தப் புளியமரத்தின் கீழே நாகர் உள்ளது. சிவனணைந்த பெருமாள், ஸ்ரீபற்பநாத சாமி, சுடலைமாடசாமி, இசக்கியம்மாள், பேச்சியம்மாள் மற்றும் நவகிரக சன்னதிகள் உள்ளன.
இந்த கோயிலில் பவுர்ணமி பூஜை , சங்கடஹரசதுர்தி, பங்குனி உத்திரம், ஐப்பசி திருக்கல்யாணம், நவராத்திரி திருவிழா ஆகியவை சிறப்பாக நடக்கிறது. தினமும் இரண்டு கால பூஜை நடக்கிறது. இங்குள்ள நாகருக்குப் பால் ஊற்றி, மஞ்சள் பொடி அபிசேகம் செய்து வந்தால் சர்ப்ப தோஷம் நீங்கும்.
அமைவிடம் : நெல்லை & திருச்செந்தூர் மெயின்ரோட்டில் செய்துங்கநல்லூரில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் இக்கோயில் இருக்கிறது ஆட்டோ வசதியும் உள்ளது.
( நதி வற்றாமல் ஓடும்)
( நதி வற்றாமல் ஓடும்)


