தூத்துக்குடி மாவட்டத்தில் டிச.27, 28, ஜன.3, 4 ஆகிய நாட்களில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது என்று மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் சிறப்பு தீவிர திருத்தம்-2026 ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டினை தொடர்ந்து 19-12-2025 முதல் 18-1-2026 வரை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்கள் அமைந்துள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில், பொதுமக்களிடமிருந்து வாக்காளர் பட்டியலில் சேர்வதற்கு படிவங்கள் பெறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பொதுமக்களின் வசதிக்காக 27-12-2025 (சனிக்கிழமை) 28-12-2025 (ஞாயிற்றுக்கிழமை), 03-01-2026 (சனிக்கிழமை), 04-01-2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியல்களில் பெயர் சேர்க்க, பெயர் திருத்த, முகவரி மாற்ற, நகல் அடையாள அட்டை மற்றும் பெயர் நீக்க உரிய படிவங்களில், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
மேலும், வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதையும் சரிப்பார்த்துக் கொள்ளலாம். இணையவழியாக www.voters.eci.gov.in மூலமும் விண்ணப்பிக்கலாம். மேலும், கூடுதல் விபரங்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 0461-1950 மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் அலுவலகங்களில் உள்ள உதவி மையங்களை அணுகி பயன்பெறலாம். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வாக்காளர் பட்டடியலில் உங்களது பெயர் இடம் பெற அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நாளை (27.12.2025) இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர்விஜய் நெக்ரா, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளார்கள். அதனைத் தொடர்ந்து சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ள வாக்குச்சாவடிகளை பார்வையிட உள்ளார் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.


