தூத்துக்குடி தாளமுத்துநகா் ராஜபாளையம் புனித பிலோமினம்மாள் ஆலயத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு திருப்பலி, பிராா்த்தனைகள் மற்றும் முளைப்பாறி ஊர்வலம் நடைபெற்றது.
தூத்துக்குடி அருகே உள்ள ராஜபாளையம் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் ஏசுகிறிஸ்து பிறப்பை வரவேற்கும் வகையில் ஆண்டுதோறும் முளைப்பாரி ஊர்வலம் மற்றும் களியல் ஆட்டம் நடந்து வருகிறது. அதன்படி மக்கள் வீடுகளில் 10 நாட்களுக்கு முன்பே முளைப்பாரிகளை தொட்டிகளில் வைத்து விரதம் மேற்கொண்டனர். கிறிஸ்துமஸ் பண்டிகை நாளான நேற்று மாலையில் பெண்கள், குழந்தைகள் புத்தாடை அணிந்து முளைப்பரிகளை ஊர்வலமாக எடுத்து சென்றனர். அப்போது இளைஞர்கள், சிறுமிகள் களியல் ஆட்டம் ஆடியபடி கடற்கரைக்கு வந்தனர்.
அங்கு அமைக்கப்பட்டு உள்ள கிறிஸ்துமஸ் குடில் மற்றம் அந்தோணியார் ஆலயத்தில் பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து கும்மி பாட்டு பாடி முளைப்பாரிகளை கடலில் கரைத்தனர். பின்னர் கிராம மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் கடற்கரையில் அமர்ந்து உற்சாகமாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினர். ஆண்டுதோறும் தலைமுறை தலைமுறைகளாக கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று முளைப்பாரி ஊர்வலம் மற்றும் களியல் ஆட்டத்துடன் கொண்டாடி வருவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.


