தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ‘கேரல் பவனி’ என்ற வாகன அணிவகுப்பு கோலாகலமாக நடந்தது. இதில் பல்வேறு வடிவங்களில் மின்விளக்கு அலங்காரங்களுடன் சென்ற வாகனங்களை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமான இன்று (வியாழக்கிழமை) உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நள்ளிரவு பிரார்த்தனைகள் நடந்தன. முக்கிய வீதிகளில் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தன.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ ஆலயங்கள் சார்பில் மக்களின் வீடுகளுக்கு சென்று கேரல் பாடல்கள் பாடி, பிரார்த்தனை செய்து, கேக் உள்ளிட்ட இனிப்புகளை வழங்குவார்கள். டிசம்பர் மாதம் ஆரம்பத்தில் இருந்தே இந்த கேரல் பவனி தொடங்கி நடப்பது வழக்கம். கேரல் குழுவில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்த ஒருவரும் நடனம் ஆடியபடி குழந்தைகளுக்கு பரிசுகளை கொடுத்து மகிழ்விப்பார்.
அதன்படி தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகள், இளைஞர்கள், ஆலயங்கள் சார்பில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் கேரல் பவனி நடந்தது. நேற்று இரவு தூத்துக்குடி மாநகரில் பல்வேறு பகுதிகளில் இருந்து அலங்கரிக்கப்பட்ட கேரல் வாகனங்கள் அனைத்தும் தெற்கு காட்டன் ரோட்டில் இருந்து பவனியாக புறப்பட்டன. இதில் இயேசு கிறிஸ்து பிறப்பை குறிக்கும் வகையில் குடில்கள் அமைக்கப்பட்டு இருந்தன. பார்வையாளர்களை கவரும் வகையில் ரெயில் என்ஜின், கப்பல், கிறிஸ்துமஸ் தாத்தா, விண்வெளிக்கு செல்லும் ராக்கெட் போன்ற பிரமாண்ட உருவங்களும் அமைக்கப்பட்டு, வண்ண விளக்குகளாால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.
லயன் ஸ்டவுன், மரக்குடி, மட்டக்கடை, பாத்திமாநகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கேரல் பவனி வி.இ.ரோடு, குரூஸ்பர்னாந்து சிலை, டபிள்யூ.ஜி.சி. ரோடு வழியாக சென்றது. இதில் கப்பல், ஹெலிகாப்டர், ரோபோ, பச்சை மனிதன், மற்றும் கிறிஸ்மஸ் தாத்தா உள்ளிட்ட வாகனங்களில் கண்ணை கவரும் வகையில் மின் விளக்குகள் எரியவிட்டு இன்னிசை ஒலிக்க இளைஞர்கள் ஆட்டம் பாடத்துடன் ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பனிமய மாதா பேராலயம் வந்தடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் இளைஞர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

பவனியில் வந்த இளைஞர்கள், சிறுவர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், நடனமாடியும் மகிழ்ச்சியுடன் கிறிஸ்துமஸ் விழாவை வரவேற்றனர். இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் அலங்கார அணிவகுப்பில் 10 அடி உயரம், இடத்துக்கு தகுந்தவாறு உயரத்தை கூட்டி குறைக்கும் கிரேன் வாகனத்தை பயன்படுத்தக் கூடாது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எந்த செயல்பாடும் இருக்கக் கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துகளை தவிர்க்கும் வகையில், உயரமான அலங்காரங்கள் வைக்க போலீசார் கட்டுப்பாடுகள் விதித்து இருந்தனர். மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் மேற்பார்வையில், ஏஎஸ்பி மதன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


