ரயில் கட்டண உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று எம்பவர் இந்தியா நுகர்வோர் அமைப்பு கவுரவ செயலாளர் ஆ.சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய ரயில்வே அறிவித்துள்ள இரயில் கட்டண உயர்வு, ஏற்கனவே விலைவாசி உயர்வு, பணவீக்கம் காரணமாக பாதிக்கப்பட்டு வரும் பொதுமக்கள் மீது கூடுதல் பொருளாதார சுமையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 250 கி.மீக்கு மேல் பயணம் செய்பவர்கள், தினசரி பயணிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், விவசாயிகள் மற்றும் நடுத்தர குடும்பங்கள் இந்த கட்டண உயர்வால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ரயில் பயணம் என்பது பொதுமக்களுக்கு ஆடம்பரம் அல்ல; அது அடிப்படை தேவையாகும் என்பதை மத்திய அரசும் இந்திய ரயில்வே நிர்வாகமும் உணர வேண்டும்.
தற்போதைய நிலையில் பல ரயில்களில் பயணிகள் சந்திக்கும் அடிப்படை பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. ரயில்களின் தொடர்ச்சியான காலதாமதம், சுத்தமற்ற பெட்டிகள் மற்றும் கழிப்பறைகள், தரமற்ற உணவு, தனியார் கான்டீன் சேவைகளில் கட்டுப்பாடு இல்லாமை, புகார் அளித்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலை ஆகியவை பயணிகளை பெரிதும் அவதிக்குள்ளாக்குகின்றன. இவ்வாறான குறைகள் நீடிக்கும் நிலையில், சேவை தரத்தை மேம்படுத்தாமல் கட்டண உயர்வு அறிவிப்பது நுகர்வோர் நலனுக்கு எதிரானதாகும்.
எனவே, எம்பவர் இந்தியா சார்பில், இந்திய ரயில்வே நிர்வாகம் முதலில் பயணிகள் வசதிகளை முழுமையாக மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
சாதாரண மற்றும் குறுகிய தூர பயணிகளுக்கு கட்டண உயர்வில் விலக்கு வழங்கப்பட வேண்டும். மூத்த குடிமக்கள், மாணவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான சலுகைகள் எந்த மாற்றமும் இன்றி தொடர வேண்டும். ரயில்களின் சுத்தம், பாதுகாப்பு, நேர்த்தி உறுதி செய்யப்படுவதுடன், உணவு மற்றும் கான்டீன் சேவைகள் அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு தரமும் விலையும் கடுமையாக கண்காணிக்கப்பட வேண்டும்.
“முதலில் சேவை தரம் – அதன் பின்னரே கட்டண உயர்வு” என்பதே பொதுமக்களின் நியாயமான எதிர்பார்ப்பாக உள்ளது. மக்களின் நலனையும் சமூக நீதியையும் கருத்தில் கொண்டு, இரயில் கட்டண உயர்வு குறித்த முடிவை மத்திய அரசும் இந்திய ரயில்வே நிர்வாகமும் உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என எம்பவர் இந்தியா சார்பில் வலியுறுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.


