கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா வைத்திருந்த தூத்துக்குடி வாலிபர்கள் 4பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகே உள்ள அய்யாபுரம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒடிசாவிலிருந்து சிலர் கஞ்சாவை விற்பனைக்காக கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஆர்தர் ஜஸ்டின் சாமுவேல், சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி மற்றும் போலீசார் கயத்தாறு -அய்யாபுரம் சாலையில் நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அய்யாபுரம் அருகே 4 பேர் சந்தேகத்திற்கு இடமான முறையில் கையில் பையுடன் நடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை நடத்தினர்.
அந்த பையில் 2கிலோ கஞ்சா இருந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் தூத்துக்குடி எஸ்.கே.எஸ்.ஆர்.காலனி மாரிச்செல்வம் (21), போல்பேட்டையை சேர்ந்த மாரிபிரபாகரன் (25), நந்தகோபாலபுரத்தை சேர்ந்த சிவா (25), அன்பு நகரைச் சேர்ந்த சிவலிங்கம் (26) ஆகியோர் எனவும், ஒடிசா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து, இப்பகுதியில் விற்பனை செய்வதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து அய்யாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 4பேரையும் கைது செய்தனர்


