உடன்குடி வீரர்களுக்கு நடுராத்திரியில் அம்மன்புரம் அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் இராஜகோபால் தலைமையில் கூட்டம் நடந்தது.
காசி சொன்னான். “குலசேகரன்பட்டினம் உப்பளத்தில் 12-க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் உள்ளன. குலசேகரன்பட்டினம் உப்பளத்தின் மீது தாக்குதல் நடத்தினால் துப்பாக்கிகளைக் கைப்பற்றலாம்”.
அனைவரும் அதை ஆமோதித்தனர்.
“அப்படியென்றால் உப்பளத்தினை தாக்க வேண்டும்”.
“முடியுமா?”
“அங்கே லோன்துரை தலைமையில் மிகப்பெரிய கூட்டம் உள்ளது. லோன் துரை ஒரு முரடன். அது மட்டுமல்ல நம்மவர்களே நம்மை எதிர்த்து நிற்பார்கள்”.
“முதலில் அங்கே சிவந்திக்கனியை அனுப்ப வேண்டும்”.
“எதற்கு?”.
“அவன் வேவு பார்ப்பதில் திறமைசாலி”.
உடனே சிவந்திகனியை அழைத்தார்கள்.
இராஜகோபால் சொன்னான், “சிவந்தி கனி நீ போய் குலசேகரபட்டினம் உப்ளத்தினை வேவு பாரு. அங்கே துப்பாக்கி இருக்கு. அதை எடுத்துட்டு வரணும். அதுக்கு சூழ்நிலை எப்படி இருக்குன்னு நீ பாக்கணும்”.
“ம்”. தலையசைத்தான். உடனே அவன் அங்கிருந்து கிளம்பியும் விட்டான்.
உப்பளத்துக்குள் வேலை செய்பவர் போலவே சென்றான். அங்கே எந்த கட்டிடம் எங்கே இருக்கிறது. எத்தனை குடில் இருக்கிறது. எந்த குடிலில் யார் எங்கே இருப்பார். அவர்களை எப்படி தாக்கலாம். எண்ணிக்கை எத்தனை. எதை அடித்தால் என்ன நடக்கும். எப்படி முன்னேற வேண்டும் என்பதையும் அங்கே உள்ள நிலவரத்தினை வேவு பார்த்தான்.
மறுநாள்.
ராஜகோபால் தலைமையிலான கூட்டத்திற்கு அவன் திட்டம் வகுத்து கொடுத்தான். அனைவரும் கவனமாக இருந்தது. மிகப்பெரிய பிரச்சனை ஆங்கிலேயனை விரட்ட வேண்டும். பயங்காட்டி விரட்டவேண்டும். அவன் வைத்திருக்கும் ஆயுதங்களை கைப்பற்ற வேண்டும். கண்டிப்பாக உயிர் பலி எதுவும் ஏற்படுத்தி விடக்கூடாது. இதுதான் காங்கிரஸ் காரர்கள் திட்டம்.
அதன்படியே திட்டம் வகுக்கப்பட்டது.
“முதலில் உப்பளத்துக்குள் செல்ல நாள் குறிக்க வேண்டும்”.
1942 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ம் நாள் அதற்கென நாள் குறிக்கப்பட்டது.
நள்ளிரவு 12 மணி.
இராஜகோபால் தலைமையில் எல்லோரும் ஒன்று கூடினர்.
சரியாக உப்பளத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் பாரி கம்பேனி என்ற சீனி ஆலை இருந்தது. அந்த ஆலைக்கு பதனீர் கொண்டு செல்லும் குழாய் அருகே காங்கிரஸ்காரர்கள் ஒன்றாக கூடினர்.
சரியாக திட்டமிட வேண்டும். அப்படி திட்ட மிட்டால்தான் ஜெயிக்க முடியும். அதற்காக ராஜகோபால் திட்டம் தீட்டி கொடுத்தார்.
“இங்கே பாருங்க நாம எல்லோரும் கூட்டமாக போகக்கூடாது. ஒரு பிரிவை சேர்ந்தவர்கள் பிடிபட்டாலும், இன்னொரு பிரிவை சேர்ந்தவர்கள் அங்கே வந்து தாக்கணும்”
“ம். அப்படின்னா நாம சரியா திட்டம் போடனும். துரைமாருக்கிட்டே துப்பாக்கி இருக்கும். பொசுக்குன்னு சுட்டுபுடுவானுவ”
“ஆமா அதுக்குத்தான் சொல்லுதேன். நாம இரண்டு பிரிவா போவோம். ஒரு பிரிவு முன்னால உள்ள கதவை உடைச்சிக்கிட்டு போவோம். இன்னொரு குழு உப்பளத்துக்கு கிழக்குப்புறம் முன்னே இருக்கிற முள்வேலியை பிய்ச்சிக்கிட்டு போனும்”.
“ம். அங்க காவலாளி இல்லாமலா இருப்பான்”.
“இருப்பான். நாம குழுவில இரண்டு பேரு காவலாளியை பிடிச்சு கட்டிபோடனும். அவன் வாயிலை துணியை வைச்சு, சத்தம் போடாம பாத்துக்கனும். அவன் கை காலை கட்டி போட்டணும். அதோட மட்மில்லாம அவன் கிட்ட இருக்கிற துப்பாக்கியை புடுங்கனும். அது தான் நமக்கு முத வெற்றி”.
கூட்டத்தில் சல சலன்னு ஒரு சத்தம்.
“என்ன உங்களுக்குள்ளேயே முணுமுணுன்னு பேசுறீய. முடியாதுன்னு நினைக்கிறியளா?”
பெஞ்சமின் சொன்னான். “நாம எல்லோரும் பேசுறது சரித்தான். கூட்டமா இருக்கோம். நம்ம கூட்டத்திலேயே வேறு யாரும் உளவாளி இருக்கானுவளான்னு பாக்கணும். நம்ம போடுத திட்டம் எதிராளி காதுல விழுந்திருக்கூடாது”. “உண்மைத்தான் இதுல வே«று யாராவது சதி திட்டம் போடுற உளவாளி இருக்கானுவளான்னு முதலுல பாருங்க”.
எல்லோருக்கும் அதிச்சியாக இருந்தது. “உண்மைதானே . இந்த பெரிய கூட்டத்தில ஆங்கிலேய துரைகளுக்கு உளவு சொல்ல யாராவது கூடியிருந்தா”.
அனைவருக்கும் மனதுக்குள் பயம் கொடுத்தது.
“அம்முட்டுத்தான்”. காசிராஜன் வந்தான். கையில் வைத்திருந்த பேட்டரி லைட்டை எடுத்தான். ஒவ்வொருவர் முகத்திலும் அடித்து பார்த்தான். பின்னாலேயே கொட்டங் காடு காசிநாடாரும், மந்திரமும் ஆள்களை பார்த்துக் கொண்டே வந்தார்கள். தலையை எண்ணிக்கொண்டே வந்தார்கள்.
67 பேர் இருந்தார்கள். அவ்வளவு பேரும் நம்மவர்கள் தான் என உறுதி செய்து கொண்டார்கள். “சரித்தான் அப்போ நம்ம திட்டத்திதை பத்தி பேசுவோம்”. “அடுத்து இரண்டு பிரிவாக பிரியவேண்டும்”.
“எப்படி?”
“ராஜகோபால் தலைமையில் 52 பேர் முள்வேலியை பிரித்துக்கொண்டு உப்பளம் உள்ளே போணும்”
“மீதி 15 பேர் மந்திரக் கோனார் தலைமையில் மெயின் கேட்டை உடைத்துக்கொண்டு நுழைய வேணும்”
திட்டம் தயாராகி விட்டது.
வேல்கம்பு, வெட்டரிவாள், ஈட்டி, பெட்ரோல் என ஆயுதங்களை தனித்தனியாக வைத்துக்கொண்டார்கள். காவலாளிகனைக் கட்டுவதற்குத் துண்டு துண்டாக வெட்டப்பட்ட கயிறு சேகரிக்கப்பட்டிருந்தது. திமிறினால் அவனை அடித்து உருட்டுவதற்கு உருட்டுக் கட்டைகள் தயாராக இருந்தது.
குறிப்பாக யாரையும் அடித்துக் கொல்ல வேண்டும் என்ற எண்ணமில்லை. ஆனால் சுதந்திரம் பெறவேண்டும் என்றால் பரங்கியர்களை ஓட ஓட விரட்டவேண்டும். அப்படி விரட்ட வேண்டுமென்றால் நிச்சயம் அடி உதை தான்.
இராஜகோபால் குரும்பூர் இரயில் நிலையத்தைத் தாக்கி கைப்பற்றி வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு வந்திருந்தான். காசிராஜன் ஆறுமுகநேரியில் இருந்து கண்டக் கோடாரி யை கொண்டு வந்திருந்தான்.
அந்த நாள் 20.09.1942.
அதிகாலை 3 மணி.
ஆம். திட்டம்போட்டு 1 கிலோ மீட்டரை கடக்க 2 மணிநேரம் ஆலாசனைக்கு எடுத்துக் கொண்டார்கள்.
காரணம் . கூட்டத்தில் இருக்கும் 57 பேருக்கும் திட்டம் வகுத்துக் கொடுக்கப்பட்டிருந்தது. குறிப்பாக மந்திரகோன் பொறுமையாக முன்வாசலில் இருக்கவேண்டும். இராஜகோபால் குழுவினர் முள்வேலியை உடைத்து உள்ளே வந்த பிறகுதான் மந்திரகோன் கதவை உடைத்து உள்ளே செல்ல வேண்டும்.
இதுபோன்று திட்டம் போட்டும் கூட, சொதப்பல் ஆகி விட்டது. இதனால் தான் உயிர் பலியில் போய் முடிந்து விடப்போகிறது என்பது அப்போது யாருக்கும் தெரியவில்லை.
முன் வாசல் அருகே போய் மந்திரகோன் குழுவினர் நின்றனர். முள்வேலியை பிரித்து உள்ளே நுழைய ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர் ராஜகோபால் குழுவினர்.
இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத சம்பவம் ஒன்று நடந்தது.
அதிகாலை 3 மணி.
உப்பளத்தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல மணி அடிக்கும் நேரம். இது போராட்ட காரர்களுக்கு தெரியவில்லை.
அந்த வேளையில் காவலாளி வேதமணி முன்வாசலுக்கு வந்தான். அங்கே தொங்கி கொண்டிருக்கும் மணி அருகே வந்து நின்றான்.
மூன்று முறை மணியை அடித்தான்.
மந்திரகோன் அதிர்ந்தே விட்டான்.
நாம் வந்தது தெரிந்து விட்டது. எனவே தான் மணி அடித்து அனைவரையும் எழுப்புகிறார்கள். எனவே என்ன செய்வது என்று புரியாமல் தவித்தனர். தனது குழுவினருக்கு எப்படி பதில் சொல்ல, அவர்களை எப்படி இயக்க என்று தெரியாமல் தவித்தனர். திட்டமிட்டப்படி ராஜகோபால் குழுவினர் எங்கே வருகிறார்கள் என்பதை அறியவில்லை. அவர்களை பற்றி தெரிந்து கொள்ள நினைக்கவும் இல்லை. தாங்கள் திட்டமிட்டபடி அவர்கள் வந்த பிறகுதான் கதவை உடைக்க வேண்டும் என்பது திட்டம்
திட்டத்தினை மறந்து, அவரப்பட்டு தீடிரென்று முன்கதவை உடைக்க ஆரம்பித்தனர் மந்திரகோன் குழுவினர்.
டக் டக் என சத்தம்.
ராஜகோபாலுக்கும் கேட்டது. அவரசப்பட்டு விட்டான் மந்திரகோன் என அறிந்தும் கொண்டான். எனவே அதிரடி நடடிக்கை எடுக்க கட்டாயம் அவனுக்கு ஏற்பட்டது.
அடுத்த கட்டம் வேகமாக வேலியை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைய குழுவினரிடம் உத்தரவிட்டான்.
“அவரசப்பட்டு விட்டான் மந்திரம். ஆம்.கதவை உடைக்க ஆரம்பித்து விட்டான். அங்கே கூட்டம் குறைவாக உள்ளது. எதிரியிடம் மாட்டிவிடக்கூடாது. ம். சீக்கிரம் இப்போதே நாம் போனால் தான் எதிரிகளிடம் இருந்து நம்மவர்களை தப்பிக்க வைக்க முடியும்”.
ராஜகோபால் ஆணையையேற்று அனைவரும் திரட்டனர். வேலியை உடைத்து எரிந்தனர். போர்களத்தில் நிற்கும் படை வீரர்கள் எதையும் எதிர்பார்க்காமல் எதிரியை தாக்க கிளம்புவது போல் கிளம்பினார். கையில் யார் கிடைத்தாலும் விட மாட்டார்கள். வெள்ளையன் மீது உள்ள கோபம். இதற்கு இடையில் யார் வந்தாலும் விட மாட்டார்கள். ஆனால் உயிர்பலி ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தனர். ஆனால் பாவம் இவர்கள் நினைத்தது எங்கே நடக்கப்போகிறது.
இங்கே நடக்கும் சத்தம் கேட்டு, உப்பளத்தில் உள்ள காவலாளிகள் அனைவரும் எழுந்து விட்டனர்.
கதவு தட்டும் சத்தம் கேட்டு, வேதமணி கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான்.
“யாருடே நீங்க. இப்ப வந்து இங்க என்ன நொட்டிக் கிட்டு இருக்கிய” என கோபமாக கேட்டான். அவனுக்குதெரியும் இவர்கள் எல்லாம் காங்கிரஸ் போராட்ட காரர்கள் என்று. ஆனாலும் அவனுக்கு இவர்களை பார்த்தால் எளக்காரமாக இருந்தது.
அவனை பார்த்தவுடன் மந்திரகோனுக்கும் எரிச்சல் ஏற்பட்டது.
“ஏலே நாங்க யாருன்னு உனக்கு தெரியலை. சொம்பு தூக்கி. மத்த பயலுகளுக்கு சொம்பு தூக்கிட்டு அலையிறவன். நீ. எங்களை உனக்கு யாருன்னு தெரியலையோ?”.
கோபமாக கேட்டான்.
“எனக்கு யாருன்னு தெரியலைடே. ராத்திரி போல பிச்சையெடுக்க வந்த மாரி வந்து நிக்கியளே. நீங்க யாரு”. திரும்பவும் கேலியாக கேட்டான்.
“நாங்க காங்கிரஸ் காரங்க. வெள்ளைகார பயபுள்ளையலை பொதடியில அடிச்சி வெறட்ட வந்துருக்கோம்”.
“புடுங்கீருவிய” வேதமணி பேச்சு எரிச்சல் ஊட்டியது.
கோபம் தலைக்கேறிய மந்திரகோன் வேதமணியை அடித்து துவைத்து விட வேண்டும் என நினைத்தான். வேதமணியோ இவர்களை எதிர்த்து தாக்க தயாராகி விட்டான். அவ்விடத்தில் மிகப்பெரிய மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டது. இங்கே ஏற்பட்ட சத்தம், வேலியை மற்றொரு குழுவினர் பிடுங்கும் சத்தம் எல்லாம் உள்ளே உப்பளத்தில் உள்ள ஓலைக்குடிசைக்குள் படுத்திருந்த இராமசாமிதாசுக்கு கேட்டது.
இராமசாமி தாஸ். உப்பள காவலாளிக்கெல்லாம் , தலைமை காவலன். எழுந்தான். இது என்ன காலையில 3 மணிக்கு வாயில் கதவு பக்கம் சத்தம் என நினைத்தவன் குடிலுக்கு வெளியே வந்தான்.
வாயில் கதவு அருகே நடந்த சம்பவம் மங்களாக தெரிந்தது. அங்கே ஏதோ கைகலப்பு நடைபெறுவது போலவே தெரிந்தது. அதோடு மட்டுமல்லாமல் எதிர்புறத்தில் உள்ள வேலியை பெரிய கும்பல் உடைத்துக்கொண்டு உள்ளே நுழைவதும் தெரிந்தது.
ஆகா. ஏதோ அசாம்பாவிதம் நடக்கிறது என்பதை புரிந்து கொண்டான் இராமசாமி தாஸ். குடிலுக்குள் வந்தான். அங்கே இரவு காவலர் சுப்பிரமணிய பண்டிதன் படுத்து தூங்கிகொண்டிருந்தான். இரவு 12 மணி வரை காவல் காத்த அலுப்பு. அவனுக்கு ஆழ்ந்த உறக்கம். தபால் எடுத்து வரும் வேலுக்கோனாரும் அருகில் தூங்கிகொண்டிருந்தார்.
உள்ளே பெரியநாயகம் பிள்ளை என்ற தலைமை காவல் எழுந்து விட்டார். எல்லோரும் டீ குடிக்கலாம் என நினைத்து, டீ போட தேவையான பணிகளை துவங்க ஆரம்பித்தார்.
இந்த வேளையில்தான் இராமசாமி தாஸ் உறக்க குரலில் சத்தமிட்டார். “எழுந்திருங்க. எல்லோரும் எழுந்திருங்க. ஒரு கும்பல் நம்மை தாக்க வாரங்க” என்று கூக்குரல் இட்டார்.
இதற்கிடையில் வேதமணியின் கழுத்தில் கத்தியை வைத்தனர் மந்திரகோன் குழுவினர்.
அவன் விட்டால் போதும் என அங்கிருந்து தப்பித்து, முன் கதவை மீண்டும் அடைத்து விட்டு, உள்ளே தலை தெறிக்க ஓடி வந்தான்.
“காப்பாத்துங்க. காப்பாத்துங்க”. என்று கத்தினான்.
இந்த சத்தமும் பெரியநாயகம் பிள்ளையின் காதுகளில் விழுந்தது. இராமசாமி தாஸ் சத்தமும் அவரை அச்சுறுத்தியது. உடனே குடிலுக்குள் ஓடிப்போய் சுப்பிரமணிய பண்டிதனையும், வேலுக்கோனாரையும் எழுப்பினார். அவர்கள் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் எழுந்து எழுந்து பரக்க பரக்க முழித்தனர்.
இதற்கிடையில் வேதமணி குடிசலுக்குள் ஓடி வந்து அங்கிருந்த துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வெறியுடன் மீண்டும் வாயிலை நோக்கி ஓடினான்.
ஓடிப்போனவன் சும்மா இருக்கமாட்டான் என அவன் மீது ஆத்திரத்துடன் மந்திரம் தலைமையில் வந்தக்குழு முன்வாசலை உடைத்துக் கொண்டு குடிசை அருகே வந்து விட்டது.
ஏதோ நடக்கப்போகிறது என தெரிந்துகொண்ட இராஜகோபால் குழுவினரோ முள்வேலியை பிரித்துக்கொண்டு உள்ளே குடிலை நோக்கி ஓடி வந்தனர்.
அதே நேரம் அங்கே ஒரு கலவரம் நடக்கப்போகிறது என்ப¬ த அறிந்த பலர் கலைய ஆரம்பித்தனர். “அவன் அவன் துப்பாக்கியை தூக்கிட்டு அங்கிட்டு இங்கிட்டு ஓடுதான். நம்மளை நோக்கி சுட்டா என்ன ஆவது” என பின் தங்க ஆரம்பித்தனர்.
அவருடன் வந்த மாடசாமி செட்டியார், பால்சாமி, பொன்னுசாமி நாடார். செல்லச் சிவலிங்கம். தங்கராஜ் ஆகியோர் யோசித்தனர்.
நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொண்டனர். “ஏடே இங்க என்னடே நடக்குது. நாம துப்பாக்கியை வெளியே தெரியாம தூக்கிட்டு ஓடினுமுன்ன வந்தோம். இங்க என்னன்னா என்னமோ நடக்கு. ஏடே இவனுவ மோதுறதை பாக்கும் போது கொலை நடந்தாலும் நடந்துருமுடே. நாம ஓடிப்போயிரும்” மாடசாமி செட்டியார் பயத்துடன் கூறினார்.
“உண்மைதானே நாம வந்தது துப்பாக்கியை கொள்ளையடிக்க ஆனா இங்க வேறல்லா நடக்கு”.
“சரி நம்ம பயலுவ சொன்ன கேட்க மாட்டானுவ. என்னத்தையும் பண்ணுட்டு போறானுவ. நாம ஒடிருவோம்”.
மூன்று பேரும் அங்கிருந்து ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தனர். இதை பார்த்த வேதமணிக்கு தைரியம் வந்தது. “பயந்தாகொல்லி பயலுவ. துப்பாக்கியை தூக்கின உடனே ஓடுதானுவ. விடக்கூடாது . இவனுவளை விடக்கூடாது”. என நினைத்துக்கொண்டு துப்பாக்கியை தூக்கி வானத்தினை நோக்கி சுட்டான் .
ஆனால் அந்த குண்டு வெடிக்க வில்லை. வேதமணி மாறி மாறி முயற்சி செய்தான். அவன் முயற்சி பலிக்கவில்லை. இதனால் ஆத்திரத்துடன் துப்பாக்கியை தரையில் தட்டினான்.
இந்த நிலையில் கோயில் பிளளை என்பவர் தனது அரிவாளால் வேதமணியை ஓங்கி வெட்டினர். வெட்டு வேதமணியின் வலதுகாலில முழங்காலுக்குக் கீழே விழுந்தது. அய்யோ என விழுந்தான் வேதமணி. மற்றவர்கள் வேதமணியை அடித்து துவைத்தனர். அவனை மிதித்து தள்ளினர்.
வேதமணி அலறி கூச்சலிட்டான்.
சிவந்திகனி தன்னிடம் இருந்த கயிற்றால் வேதமணியின கையை பின்புறமாக கட்டி, உருட்டி விட்டான். வேதமணியின் அலறல் சத்தம் அந்த உப்பளத்தில் பெரிதாக எதிரொலித்தது.
அறைகுறை தூக்கத்தில் வெளியே வந்த பெரியநாயகம் வேதமணியை காப்பாற்ற அருகில் கிடந்த கம்பை தூக்கி கொண்டு சண்டைக்கு வந்தார்.
கம்பை சுழற்றி அடித்த காரணத்தினால் மற்றவர்கள் ஓட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அந்த நேரத்தில் காசிராஜன் தன் கையில் இருந்த கோடாரியை எடுத்து பெரியநாயகத்தினை நோக்கி வீசினார்.
நல்லவேளை அவர் தலைகுனிந்தார். ஆகவே தப்பித்தார்.
ஆனாலும் வெறிகொண்டு ஓடிய காசிராஜன், மீண்டும் கோடாரியை எடுத்தான்.
அவரை தடுத்தான் ராஜகோபால், “ விட்டுரு. அவரும் நம் சகோதரர்தான் . அவரைக் கொன்னுடாத” என்றான்.
“அறிவு கெட்டவன் பறங்கியனுக்கு வால் பிடிக்கான். இவனை முதலில போட்டுத்தள்ளனும்”
கோயில் பிள்ளை அவரை மிதித்து தள்ள, அவர் தரையில் உருண்டார். தான் கொண்டு வந்த கயிற்றால் அவரை கட்டி உருட்டினான். அவர் அலறினார். மறு நிமிடம் வாயில் துணியை வைத்து அடைத்து அவரை உருட்டி விட்டான்.
வெளியே வந்த இராமசாமிதாஸ், வேலுக்கோனார், சுப்பிரமணிய பண்டிதர் ஆகிய மூன்று பேரும் அதை பார்த்தனர். மிரண்டு விட்டனர். “ஆகா வந்தவனுவ பலசாளியா இருக்கானுவ. வெளியே போன வேதமணியையும் காணோம் பெரிய நாயகம் பிள்ளையை பெரிய மனுசன்னு பாக்காம உருட்டிட்டானுவ. நாம உயிர் பொழைச்சா போதும்” அங்கிருந்து நகர முயன்றனர்.
“டேய் அவனுவ மூனு பேரையும் விட்டுறாதிய. துரைக்கிட்ட போய் வம்பு தும்பு சொல்லி தப்பிக்க வைச்சிருவானுவ” என்று ஒருவன் கத்த, ஓடிச்சென்றனர் மற்றவர்கள்.
அந்த மூன்று பேரையும் பிடித்து கயிற்றால் கட்டி கீழே உருட்டினர். அதன் பின் அனைவர் வாயிலும் துணியை வைத்து கட்டினர். இப்போது நான்கு ஐந்து பேரும் சத்தம் போட முடியாது. அப்படியே சத்தம் போட்டாலும் யாருக்கும் கேட்காது. எனவே போராட்ட காரர்களுக்கு சந்தோசம் தான். முதல் வெற்றி கிடைத்து விட்டது.
எனவே சந்தோசத்துடன் அடுத்த கட்ட போராட்டத்தில் இறங்கினர்.
குடிசைக்குள் நுழைந்தனர். அங்கே பல பொருள்கள் இருந்தது. வேறு எந்த பொருளையும் தொட வில்லை. குறிப்பாக துப்பாக்கிகளை எடுத்தனர். அதை பத்திரப்படுத்தி கொண்டனர். அருகில் சேகரித்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்தனர். அனைவரும் அதன் பின் குடிசலை விட்டு வெளியே வந்தனர். அதன் பின் பெட்ரோலை குடிசல் மீது ஊற்றினர். அடுத்த நிமிடம் அந்த குடிசலுக்கு தீ வைத்தனர்.
தீ பற்றி எரிய ஆரம்பித்தது. குடிசை அருகில் கால், கைகளை கட்டிப்போட்டிருந்த நான்கு பேரும் அலறி துடித்தனர். “எங்களை தீயில போட்டுறாதீங்க. நல்லா இருப்பிய” என சைகை காட்டினர்.
“நாங்க என்ன அந்த அளவுக்கு மோசமானவனுவளா?” ராஜகோபால் வந்தவர்களிடம் கூறினான். ஏடேய் அவனுவ நான்கு பேரையில் தூக்கி போய் அந்தப்பக்கம் போடுங்க. அவனுவ தீயில எரிஞ்சி போயிடக்கூடாது. பாவம் நம்மவனுவ. அவனுவளுக்கும் பிள்ளை குட்டி இருக்கும். நமக்கு வெள்ளையனுவதான் குறி”.
மறுநிமிடம். அவன் பேச்சுக்கு அனைவரும் கட்டுப்பட்டனர்.
அவர்கள் நான்கு பேரும் தீயில் எரிந்து விடக்கூடாது என அவர்களை அங்கிருந்து தூக்கி சென்று அருகில் பாதுகாப்பாக விட்டனர்.
காசிராஜன் சொன்னான். “ஏடேய் உங்க நாலு பேரையும் இந்த தீயில தூக்கிப்போட ஒரு நிமிசம் ஆவாது. ஆனா நாங்க செய்ய மாட்டோம். எங்களுக்கு தேசப்பற்று இருக்கு. இந்த பிரச்சனையில நம்ம மக்களுக்கு எந்த தீங்கும் வரக்கூடாதுன்னு நாங்க தெளிவா இருக்கோம். அதான் நீங்க தப்பிச்சிய”. என கூறி விட்டு மற்றவர்களை கூப்பிட்டுக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.
அந்த குடிசை தீபற்றி எரிந்தது. அந்த இடமே புகைமண்டலாக காட்சியளித்தது. தீ சுவாலை அந்த குடிலில் உள்ள பனைஓலையில் கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் மள மளவென தீ பரவி, அந்த இடமே பயங்கரமான சூழ்நிலையை ஏற்படுத்தியது. தீ எரியும் சத்தமும், அதன் வெப்பமும் அங்கிருந்து சுமார் 300 அடிவரை பாதிப்பை ஏற்படுத்தியது.
அடுத்து அங்கிருந்து சுமார் 400 அடியை தாண்டி வெள்ளக்காரன் தங்கிருந்த குடிசை இருந்தது.
குடிசைக்கு அருகே வேதமணியின் துப்பாக்கி கீழே கிடந்தது அதையும் தூக்கிக் கொண்டனர்.
இனி என்ன செய்யலாம். “வெள்ளக்காரன் தங்கியிருந்து குடிசைக்கு போய் அவனை மிரட்டலாமா?”
“அப்படியே பயம் காட்டிவிட்டு ஓடி விடலாமா?”.
பேராட்ட காரர்கள் கை ஓங்கியவுடனே, அனைவருக்கும் உற்சாகம் ஏற்பட்டது. “ஏதாவது ஒரு வெள்ளக்காரனை ஒரு காட்டு காட்டி விட்டு போலாமே” என நினைத்தனர்.
அவர்கள் மனதில் உப்பள மேலாளர் லோன் துரை நினைவுக்கு வந்தான்.
“மிக மோசமானவன்”.
“உப்பளத்தில் வேலை பார்க்கும் நமது மக்களை நிறைய துன்புறுத்துவான். வெறுவாக்கெட்டவன். எப்ப பாத்தாலும் நம்ம மக்க மேலே எரிஞ்சி விழுவான். முட்டா பய”
“துப்பாக்கியை காட்டி மிரட்டுவான்”.
“ஆங்கிலத்தில் ஏசுவான். அவனை பிடித்து மிரட்டி விட்டு செல்லுவோம் அப்போதான் நம்ம மக்கள் மேலே அவனுக்கு பயம் இருக்கும்”.
ஆனால் குடிசைக்குள் வேறு மாதிரி சம்பவம் நடந்து கொண்டிருந்தது.
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த வில்பிரட் லோன் துரை என்ற அந்த உப்பளத்தின் உதவி ஆய்வாளர் நன்றாக படுத்து தூங்கி கொண்டிருந்தான்.
இங்கே ஏற்பட்ட சத்தம், தீ சுவாலையின் வெளிச்சம் எல்லாம் அவனது துக்கத்தினை கலைத்தது. எழுந்தான்.
குடிசையில் உள்ள சிறு சன்னல் வழியே வெளியே எட்டிப் பார்த்தான்
பிரச்சனை பெரிதாக இருக்கிறது. சுதாகரித்தான்.
சமையல்காரனை எழுப்பினான்.
“ஏய் மேன் என் பேண்ட சர்டையை எடுத்துட்டு வா”.
தூக்க கலக்கத்தில் எழுந்த சமையல் காரன். என்ன நடக்கிறது என அவனுக்கு புரியவில்லை. “சரி எஜமான்” அவனது காக்கி அரைக்கால் பேண்ட், மேல் சட்டையை அவசர அவசரமாக அணிந்து கொண்டான். அவன் போடும் சூவை எடுத்து காலில் மாட்டினான். கத்தியுடன் இருந்த துப்பாக்கியை எடுத்து இடுப்பில் மாட்டினான்.
அருகில் செருகி வைக்கப்பட்டிருந்த தொப்பியை எடுத்து தனது தலையில் வைத்து கொண்டான். அதன் கயிற்றை நாடியில் போட்டுக்கொண்டான். மற்றொரு பெரிய துப்பாக்கியை தோளில் போட்டுக்கொண்டவன் வாட்சுமேனை கூப்பிட்டு தனது அலுவலக அறையை திறக்க சொன்னான்.
“யேய் வாட்சுமேன். ஆபிஸை தொற” என்று மிடுக்காக அதட்டினான்.
“சரி எஜமான்” என அவனும் அபீஸ் கதவை திறந்து விட்டான்.
உள்ளே நுழைந்து அங்கிருந்து கைதுப்பாக்கியை தூக்கி கொண்டான் வில்பர்ட் துரை . துப்பாக்கியில் குண்டுகளை நிரப்ப குண்டுகளை எடுத்து தனது தோளில் தொங்கும் பையில் நிரப்பி கொண்டான்.
பெரிய போர்களம் நடக்கப்போகிறது என்பது துரைக்கு புரிந்தது. ஆனாலும் அறிவற்றவர்கள் இந்தியர். அவர்கள் துப்பாக்கியை காட்டினால் மிரண்டு விடுவார்கள் என பொய்கணக்கு போட்டு கொண்டான்.
அவன் பொய் கணக்கு தோற்றக்போகிறது என்பது அவனுக்கு அப்போது தெரியவில்லை.
காவலாளி பெரியவேல் நாடார் ஓடி வந்தார். “எஜமான் அங்க நீங்க போக வேண்டாம். காங்கிரஸ் காரனுவ மொத்தமா வந்து இருக்கானுவ. நம்ம ஆளுகளை கட்டி உருட்டிக்கிட்டு இருக்கானுவ. நீங்க போக வேண்டாம் எஜமான்” என்று கண்டித்தார்.
“சும்மா இரு மேன். இந்த பயலுவளுக்கு நான் பயப்பட மாட்டேன்”.
“வேண்டாம் எஜமான். நம்ம கிட்ட ஆள் ஸ்டென்த் இல்லை. அவனுவ கும்பலா வந்து இருக்கானுவ”
“ஏய் மேன் நீ உடனே போ. போலீஸ் ஸ்டேனுல சர்க்கிள் இன்ஸ்பெக்டர் இருப்பாரு. அவருகிட்ட உப்பளத்தில பெரிய கலாட்டா நடக்கு. அந்த கலட்டாவை காங்கிரஸ் காரங்கத்தான் செய்றானுவன்னு சொல்லி புகார் கொடு. உடனே போலீசை கூட்டிட்டு வா” என்றான்.
பெரிய வேல் நாடார், துண்டை எடுத்து இடுப்பில் செருகி கொண்டு வேலியை தாண்டி விழுந்து போலிஸ் ஸ்டேஷனை நோக்கி ஓட ஆரம்பித்தார்.
கூ. இருட்டு. கலவரம் நடந்த இடத்தில் தீ பிளம்பு எரிந்து கொண்டிருக்கிறது. அந்த வெளிச்சம் உப்பளம் முழுவதம் பிரதி பலித்துக்கொண்டிருந்தது
பியூன் சங்கர மூர்த்தி -ஓடி வந்தான். “போ. நீயும் பெரியவேல் நாடார் கூட போ. போலீஸை கையோடு கூட்டிட்டு வா” என்று கட்டளையிட்டான். பியூனும் அவர் பின்னால் வேலி தாண்டி ஓடினான்.
இருவருக்குமே பயம். போலீஸ் வரும் வரைக்கும் இங்குள்ள பிரச்சனை தீராமல் இருக்குமா? லோன் துரையை விட்டு விட்டு போறோம். இவருக்கு ஏதாவது ஆபத்து இல்லாம இருக்குமா? என பல கேள்விகள் அவர்கள் உள்ளத்தில் இருந்தது. ஆனாலும் வேகம் வேமாக ஓடினார்கள். அவர்கள் போய் போலீஸ் ஸ்டேசன் கதவை தட்டும் முன்பே இங்கே பயங்கரமான அந்த சம்பவம் அறங்கேற தயாராகிக் கொண்டிருந்தது.
முத்து சாமி பிள்ளை வில்பர்ட் லோன் துரை பின்னால் விரைந்து செல்ல, அவன் கோபமாக உப்பளம் முன் பகுதியை நோக்கி சென்றான்.
இவன் கம்பீரமாக வருவதை பார்த்தவுடன் காங்கிரஸ் காரர்களுக்கு பயமாகத்தான் இருந்தது.
இவன் தோற்றம், இவன் ஆடை, இவன் இடுப்பில் அணிந்திருந்த துப்பாக்கி, கையில் வைத்திருந்த கை துப்பாக்கி, தோளில் கிடந்த மற்றொரு துப்பாக்கி, எல்லாமே அந்த நெருப்பு சுவாலையில் பிரமாண்டமாக தெரிந்தது.
காங்கிரஸ் காரர்கள் ஓடிப்போய் ஒளிந்து கொண்டார்கள். பதுங்கித்தான் இவன் மீது பாயவேண்டும் என்று வடக்கு பக்கமுள்ள முள்புதருக்குள் காசிராஜனும், ராஜகோபாலும் மறைந்து இருந்தனர்.
தங்கவேல், மந்திரம் போன்றவர்கள் உப்பளத்தின் உட்புறமாக முன்வாசலுக்காக நிறுத்தப்பட்ட கல்லின் ஓரமாகப் பதுங்கிக் கொண்டனர்.
லோன்துரைக்கு உற்சாகமாக இருந்தது. தன்னை பார்த்து எதிராளிகள் பயந்து ஓடுகிறார்கள் என்ற எண்ணம் அவனை திமிர் கொண்டு நடக்க வைத்தது.
இந்த வேளையில் தான் அவன் தனது தோளில் போட்டிருந்த பையில் குண்டுகளை வைத்திருந்தான். அந்த குண்டு வைத்திருந்த பை கிழே விழுந்தது.
அதிர்ந்து விட்டான். தனது பையோடு குண்டுகள் விழுகிறது. நாம் துப்பாக்கி கொண்டு சுட்டால், மறுநிமிடம் குண்டுகள் வேண்டும் எனவே முத்துசாமிப்பிள்ளையை கூப்பிட்டான்.
“யோவ் பிள்ளை அந்த பையில் குண்டு இருக்கு எடுத்துட்டு சீக்கிரம் வா” என்று கட்டளையிட்டான்.
ஆனாலும் இந்த பிரச்சனை எதிராளிக்கு தெரியகூடாது என்பதில் கவனமாக இருந்தான்.
எதிராளியை பயங்காட்டிய படியே லோன் துரை முன்நோக்கி செல்ல, குனிந்து முத்துசாமி பிள்ளை தவறி விழுந்த குண்டுகளை தேடினார். இதுதான் சமயம் என அருகில் மறைந்திருந்த காங்கிரஸ்காரர்கள் முத்துசாமி பிள்ளையை பிடித்துக்கொண்டார். அவர் திமிறாமல் இருக்க வாயில் துணியை வைத்து கட்டி, பின் கையை கயிற்றால் கட்டி, காலையும் கட்டி அவரை தரையில் உருட்டி விட்டனர்.
அவர் உருண்டு சென்றதோடு மட்டுமல்லாமல் தப்பிக்க திமிறினான். உடனே காங்கிரஸ் காரர் நாராயணன் பிள்ளை அவர்மீது ஏறி அமர்ந்து கொண்டார். அவரை நகர விடாமல் பிடித்துக்கொண்டார்.
இந்தியர்களை அறிவில்லாதவர்கள் என்று சொன்ன லோன் துரைக்குத்தான் அறிவில்லை. பின்னால் வந்தவர் தாக்கப்படுகிறார். எதிராளியிடம் சிக்கிக்கொண்டார் என்பது கூட தெரியாமல் மமதையில் லோன் துரை முன்வாசல் நோக்கி கம்பீரமாக சென்று கொண்டிருந்தான்.
இந்த நேரத்தில் தான் ராஜகோபால் திட்டம் தீட்டினான். ஒரு சிலரை அவன் கண்ணுக்கு முன்னால் ஓடி ஒளிவது போல் பாசங்கு காட்ட சொன்னான்.
அதன் படி இரண்டு பேர் லோன் துரை கண்ணில் தெரியும் படி ஒரு கல்லில் இருந்து மற்றொரு கல்லை நோக்கி ஓடினார்கள்.
லோன் துரை அதைப்பார்த்தான். அவனுக்கு கோபம் வந்தது. நம் கண் முன்னாலேயே ஓடி ஒளிகிறார்களே. என்று கோபத்தில் துப்பாக்கியை தூக்கினான்.
அந்த துப்பாக்கியில் கத்தி மாட்டியிருந்தது. எனவே அந்த இடத்தில் பதுங்கி இருந்தவர்களை துப்பாக்கி கத்தி கொண்டு வேகமாக குத்தினான். ஆனால் எல்லோரும் தப்பித்து ஒடினார்கள். யார் மீதும் கத்தி படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்தவன்.
“பெடி பூல்” என கத்தியபடியே அவர்களை விரட்டி துப்பாக்கியால் தாக்கினான். அவனை எதிர்த்து தாக்க தயாரானார்கள் போராட்ட காரர்கள்.
லோன் துரையை தாக்கலாம் என நினைத்து அவர்கள் கூட்டாக எழுந்து அவனை எதிர்த்து நின்றனர். லோன் துரையோ வெறி கொண்டபடி அனைவரையும் தாக்கினான். இதனால் போராட்ட காரர்கள் அவனை விட்டு ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது. பேய் போல நின்றான். அவனை எப்படி கட்டுப்படுத்த என்று தெரியவில்லை.
ஓடியவர்களில் மந்திரகோன் கால் இடறி கீழே விழுந்து விட்டான்.
இதுதான் சமயம் என்று லோன் துரை அவ¬னை வெறி கொண்ட படி துப்பாக்கி கத்தியால் குத்தினான். அவன் உருண்டு புரண்டு தப்பிக்க நினைத்தான். உருண்டான். லோன் துரையால் வேகமாக குத்த முடியவில்லை. ஆனாலும் தப்பிக்க முடியவில்லை. ஒரு சில குத்து மந்திர கோன் மீது விழுந்தது.
இந்தசமயத்தில் முத்துசாமி பிள்ளை தாக்கி கீழே உருட்டியவர்கள் அனைவரின் பார்வையும் லோன் துரை மீது பட்டது.
ஒரு வெள்ளைக்காரன் நம்ம ஊர் காரனை கத்திகொண்டு குத்துறான் என கோபம் கொண்டான்.
அடுத்த நிமிடம் மொத்தமாக வந்து லோன் துரையை தாக்கினர்.
இந்த தாக்குதலில் லோன் துரை திக்குமுக்காடி போனான். இந்த சமயத்தில் தான் காசிராஜன் தனது கையில் இருந்த கண்டக் கோடாரியால் லோன்துரை வலது கையில் வெட்ட, அந்த கை பிடித்திருந்த துப்பாக்கியுடன் துண்டானது.
( லோன் துரை கொலை வழக்கு தொடரும்)


