திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு நேற்று இரவு கடற்கரையில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் குவிந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, காலை 5.30 மணிக்கு விஸ்வரூபம், காலை 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. சுவாமி ஜெயந்திநாதருக்கு 108 மகாதேவர் சன்னதி முன்பு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.
பின்னர் மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. மாலையில் கோவில் உள்பிரகாரத்தில் 108 விளக்கு பூஜை நடந்தது. பின்னர் மகா மண்டபத்தில் உள்ள விநாயகர், மூலவர் உள்ளிட்ட அனைத்து சுவாமி சன்னதிகளிலும் நாரணி தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து கடற்கரையில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் குவிந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்கசப்பரத்தில் சண்முகவிலாசத்தில் எழுந்தருளினார். இரவு 6.55 மணியளவில் கடற்கரையில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு தீபாராதனையாகி, வள்ளி-தெய்வானையுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன்
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாத சுவாமி கோயிலுடன் இணைந்த சொர்ணமலை கதிரேசன் கோயில் நடை காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து, , மூலவர் கதிர்வேல் முருகனுக்கும், வள்ளி, தெய்வானை சமேத கார்த்திகேயர் சுப்பிரமணியருக்கு 21 வகையான மூலிகைகள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை நடைபெற்றன. இரவு 23 கிலோ எடை கொண்ட வெண்கலச் சட்டியில் திருக்கார்த்திகை மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சியும், சுவாமி, அம்பாள் திருவீதியுலாவும் நடைபெற்றது.
இதில், மண்டகப்படிதாரர்களான ஏ.பி.கே.பழனிசெல்வம் குடும்பத்தினர், தமிழ் பேரரசு கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட செயலர் வேல்முருகன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாத சுவாமி கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
அனைத்து சன்னதிகளிலும் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இரவு 7 மணிக்கு மேல் கோயில் முன் சொக்கப்பனை ஏற்றப்பட்டது. முன்னதாக, கௌரி அம்பாள் சமேத சந்திரசேகர் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. கழுகாசலமூர்த்தி கோயிலில் , சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இரவு மேலவாசலில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது. மாலை 6 மணிக்கு மலை மீது உள்ள உச்சி பிள்ளையார் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.


