சீனாவிலிருந்து குடைகள் என்ற பெயரில் கடத்தி வரப்பட்ட ரூ.10.5 கோடி மதிப்பிலான இ-சிகரெட்டுகள் தூத்துக்குடியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சிகரெட் லைட்டர் போன்ற கருவியில் நிகோடின் பவுடரை அடைத்து விற்பனை செய்யப்படுவது இ.சிகரெட் ஆகும். ஒரு இ.சிகரெட்டை 10 ஆயிரம் முறை புகைக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் சிகரெட் பிடிப்போர் விலை அதிகமாக இருந்தாலும் கூட சாதாரண சிகரெட் புகைப்பதை விட இ.சிகரெட் புகைப்பதையே அதிகம் விரும்புகின்றனர். ஆனால் சாதாரண சிகரெட் புகைப்பதை விட இ.சிகரெட் புகைப்பது அதிக ஆபத்தானது என்று கூறப்படுகிறது.
2019ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் இ.சிகரெட்டை பயன்படுத்துவதற்கும் விற்பனை செய்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு குடைகள் வந்திருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்தியாவில் குடைகள் உற்பத்தி சீரான விலையில் இருக்கும் போது, சீனாவில் இருந்து குடைகளை இந்த நிறுவனம் இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்ற சந்தேகம் மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து அந்த 20 அடி கன்டெய்னரை சோதனையிட அவர்கள் முடிவு செய்தனர். சோதனை செய்ததில் சீனாவிலிருந்து குடைகளை இறக்குமதி செய்வதாக கணக்கு காட்டி சீனாவிலிருந்து இ. சிகரெட்டுகளை இறக்குமதி செய்தது, கேரளாவைச் சேர்ந்த நாகராஜ் (42), சென்னை, கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (46), சென்னை, மடிப்பாக்கத்தைச் சேர்ந்த சுவாமிநா தன் (56) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் மூன்று பேரும் தொழிலதிபர்கள் ஆவர். இதைத்தொடர்ந்து அவர்கள் மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


