கயத்தாறு அருகே காட்டுப்பன்றிக்காக வைத்த மின் வேலியில் சிக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே தெற்கு இலந்தைகுளம் அருகே ஆத்திகுளம் சுடலை மாடசாமி சுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் சிவனுகோனார் மகன் வடிவேல் (60). இவர் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் 5 ஏக்கர் நிலத்தில் மக்காச்சோளம் பயிர் விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று தோட்டத்திற்கு சென்று மக்காச்சோளப் பயிரில் தண்ணீர் பெருகி இருக்கிறதா என்று பார்ப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது வேலியில் மின் இணைப்பு கொடுத்ததை மறந்து அந்த கம்பியில் மிதித்துள்ளார். இவரை மின்சாரம் தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவரது மனைவி தனது கணவரை வீட்டிற்குவெகு நேரமாகியும் வரவில்லையே என நினைத்து தோட்டத்திற்கு சென்று பார்த்த போது அங்கு அவர் மின்சாரம் தாக்கியதில் இறந்தது தெரியவந்தது. உடனடி வீட்டிற்கு வந்து உறவினர்களிடம் கூறவே அவர்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர் அவரை தூக்கி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இறந்து போன் வடிவேலுக்கு சுப்புத்தாய் என்ற மனைவியும் ஐந்து மகள்களும் உள்ளனர். காட்டுப்பன்றிக்காக வைத்த மின் வேலியில் சிக்கி விவசாயி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகததை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பகுதியில் காட்டுப் பன்றிகள் அதிக அளவில் நடமாடுவதால் பயிர்கள் மற்றும் விவசாயிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. ஒரு பெண் உட்பட 4பேர் பன்றிகள் கடித்து காயம் அடைந்துள்ளனர். இப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பன்றிகள் இப்பகுதியில் திரிவதால் பாதுகாப்பு இல்லாமல் பயிர் செய்ய முடியவில்லை.ஆகவே தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் உடனடியாக இப்பகுதியில் திரியும் பன்றிகளை கட்டுப்படுத்த கோரி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


