கோவில்பட்டியில் பைக் மீது வேன் மோதிய விபத்தில் சட்டக் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தென்காசி மாவட்டம், திருவேங்கடம், கீழ நீலிதநல்லூர், வெங்கடாசலபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பால்நேரு என்ற கண்ணன் மகன் தேவ் வெங்கடேஷ் (26). வாசுதேவநல்லூரில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்த இவர், செவ்வாய்க்கிழமை தூத்துக்குடியில் உள்ள தனது நண்பரை பார்த்துவிட்டு இருசக்கர வாகனத்தில் ஊர்த் திரும்பிக் கொண்டிருந்தார்.
கோவில்பட்டி-இனாம்மணியாச்சி பகுதியில் தனியார் மருத்துவமனை அருகே அணுகு சாலையில் வந்தபோது எதிரே வந்த கூரியர் வேனும் இவர் மீது மோதியதில் தேவ் வெங்கடேஷ் பலத்த காயமடைந்தார். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தேவ் வெங்கடேஷ் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து வேன் ஓட்டுநரான திருநெல்வேலி, சுத்தமல்லியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


