குரும்பூர் அருகே பொறியியல் பட்டதாரி இளைஞரை அரிவாளால் வெட்டியது தொடர்பாக ஒருவரை கைது செய்த போலீசார், தப்பியோடிய 5 பேரை தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகேயுள்ள மேலகடம்பா, வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ஜெயசீலன் மகன் எழில் மோகன் (24). பொறியியல் பட்டதாரியான இவர், நேற்று முன்தினம் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பரான ராஜன் மகன் பாலமுருகனுடன் இரு சக்கர வாகனத்தில் கல்லம்பாறை மதகில் குளிக்கச் சென்றார்.
மதகின் அருகிலுள்ள சாலையோரத்தில் குரும்பூர், நெட்டையன் காலனியைச் சேர்ந்த கணேசன் மகன் முத்துசூர்யா (22), முத்துகுமார் மகன் கோபி (23), கல்லாம்பாறையைச் சேர்ந்த இசக்கியப்பன் மகன்களான காளிராஜ் (33), பேச்சிராஜ் (31), குரூகாட்டூர், வடக்குத் தெருவைச் சேர்ந்த பால் மகன் சுபாஷ்கர், 17 வயது சிறார் ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது, எழில் மோகனின் வாகனம் வேகமாக சென்றபோது, சாலையில் தேங்கிக் கிடந்த மழை நீர் அவர்கள் மீது தெறித்தது. இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் எழில் மோகனை திட்டியுள்ளனர். எழில் மோகன் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஆனால், அவர்கள் அனைவரும் எழில் மோகனை தாக்கினர். அப்போது முத்து சூர்யா மறைத்து வைத்திருந்த வாளால் அவரின் தலையில் வெட்டிவிட்டு, அனைவரும் தப்பியோடிவிட்டனர். தகவலறிந்த எழில் மோகனின் சகோதரர்கள் சுகுமார், பிரியவதன், சந்தோஷ் முகிலன், பாலமுருகன் ஆகியோர் அவரை மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்த புகாரின்பேரில், குரும்பூர் போலீசார் வழக்குப் பதிந்து, நேற்று 17 வயது சிறாரை கைது செய்து, தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நெல்லையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். மேலும், தலைமறைவான 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


