கயத்தாறு அருகே குடும்ப பிரச்சனையில் விவசாயியை வெட்டிக்கொலைக் கொலை செய்த அவரது மைத்துனரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே காப்புலிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோமு (55). விவசாயியான இவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் 14 ஆண்டுகள் தண்டனை காலம் நிறைவடைந்த பின்னர் கோமு சமீபத்தில் விடுதலையானார். பின்னர் கோமு தனது வீட்டுக்கு சென்று விவசாயம் செய்து வந்தார்.
இந்த நிலையில் அவருக்கும், மனைவி தங்கத்தாய்க்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. தங்கத்தாய் கணவரை விட்டு பிரிந்து மகன் மாடசாமி வீட்டுக்கு சென்றார். இதற்கு தங்கத்தாயின் சகோதாரரான விவசாயி முருகன் (57) தான் காரணம் என்று கோமு கருதி, அவர் மீது ஆத்திரத்தில் இருந்தார். நேற்று இரவில் முருகனும், அவருடைய மனைவியின் தங்கை கணவரான மந்திரம் என்பவரும் கயத்தாறு அருகே தளவாய்புரம் டாஸ்மாக் கடை பாருக்கு சென்றனர்.
அப்போது அங்கு வந்த கோமு திடீரென்று முருகனை அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க முயன்ற மந்திரத்தையும் ெவட்டினார். பின்னர் கோமு அங்கிருந்து தப்பி சென்றார். இதனைப் பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்து கயத்தாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து சென்று, படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். மந்திரத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த பயங்கர கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமைறைவான கோமுவை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


