தூத்துக்குடியில் 2 இடங்களில் மூத்த குடிமக்களுக்கான அன்புச்சோலை மையங்கள் திறக்கப்பட்டன.
தமிழகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக 25 ‘அன்புச் சோலை’ என்ற மூத்த குடிமக்களுக்கான பகல் நேர பராமரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மையத்தில் இயன்முறை மருத்துவ சேவை, யோகா, பொழுதுபோக்கு அம்சங்கள், ஓய்வறை, சமையலறை மற்றும் நூலகம் போன்ற வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
திருச்சியில் நேற்று நடந்த விழாவில் இந்த மையங்களை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன்படி தூத்துக்குடி மாநகராட்சியில் சந்திரேசன் நகர் மற்றும் கணேஷ் நகர் ஆகிய 2 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள அன்புச் சோலை மையங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து தூத்துக்குடி சந்திரேசன் நகர் மையத்தில் நடந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி மையத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்டனர். விழாவில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.


